செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (18:19 IST)
டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் நீங்கள் அடுத்தமுறை சென்றால் செல்போன் திரையை தேய்ப்பதற்குமுன் அதனைத் துடைக்க மறக்காதீர்கள்.

 

விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளில் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நுண்கிருமிகளை அகற்றும் ''டாய்லெட் பேப்பர்'' வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான செலவை ஜப்பானிய மொபைல் பெரு நிறுவனமான என்டிடி டொகோமோ செலுத்தி வருகிறது.

அந்த பேப்பரில் நிறுவனத்தின் பொது வைஃபை வலையமைப்பு கொண்ட இடங்கள் குறித்த தகவல்களும், ஸ்மார்ட் ஃபோன் பயண செயலி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த நடவடிக்கையை சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் நகைச்சுவையாகவும் மற்றும் நம்பமுடியாமலும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

செல்போன் திரையில் ஐந்து மடங்கு அதிக கிருமிகள்:

விமான நிலையத்தில் உள்ள ஏழு கழிவறைகளில் இந்த பேப்பர்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இது அங்கு இருக்கும் என்று என் டி டி டொகோமோ கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொதுக் கழிவறைகளை புரட்சிமயமாக்கும் செயல்பாடுகளுக்கு சர்வதேச அளவில் ஜப்பான் புகழ் பெற்றது. பெரும்பாலான அதன் கழிவறைகள் சுத்தமாகவும், நவீனமாகவும் மற்றும் மிகவும் விரிவான உயர் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளவை.

''கழிவறையில் அமரும் இடத்தைவிட, கைப்பேசி திரையில் ஐந்து மடங்கு அதிக கிருமிகள் இருப்பதாக'' என்டிடி டொகோமோ நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :