ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு


Murugan| Last Modified திங்கள், 11 ஜனவரி 2016 (20:48 IST)
காளை மாடுகளை கொண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தைய விளையாட்டுகளுக்கு கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

 

 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்திய விலங்குகள் நல வாரியம், தற்போது தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நடத்த இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளது.
 
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று இது தோடர்பான முறையீடு நடைபெற்ற போது, ஜல்லிக்கட்டு ரத்தவெறி கொண்ட ஒரு விளையாட்டு, எனவே அதை தடை செய்ய வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


 


இந்திய விலங்குகள் நல வாரியம் தவிர இதே மாதிரியான மனுக்களை, இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் கூட்டமைப்பு, விலங்குகள் நீதிநெறிக்குரிய மக்கள் அமைப்பு போன்ற பொதுநல அமைப்புகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் மனுதாரராக இணைந்துள்ளனர்.
 
இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் முறைப்படியாக பின்பற்றப்படும் என்றும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :