வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 13 டிசம்பர் 2014 (14:23 IST)

தாய்லாந்து இளவரசரின் மனைவி அரச பதவியைத் துறந்தார்

தாய்லாந்து நாட்டின் பட்டத்து இளவரசரான வஜிரலாங்கோர்னின் மனைவியான ஸ்ரீ ராஷ்மி தனது அரச குடும்பப் பதவியைத் துறந்திருப்பதாக அரண்மனை அறிவித்துள்ளது.



 
இளவரசி ஸ்ரீ ராஷ்மியின் எழுத்து மூலமான கோரிக்கையை அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
 
தனது மனைவியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரச குடும்பப் பட்டங்களை நீக்கிக் கொள்ளும்படி இளவரசர் வஜிரலாங்கோர்ன் அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 
ஊழலில் ஈடுபட்டதாக ஸ்ரீராஷ்மியின் உறவினர்கள் ஏழுபேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ராயல் கெஸட் எனப்படும் அரசிதழில் வெளியாகியிருக்கும் அறிக்கையில், "பட்டத்து இளவரசரான மஹா வஜிரலாங்கோர்னின் மனைவியான இளவரசி ஸ்ரீராஷ்மி, தனது அரச குடும்பப் பதவியிலிருந்து விலகுவதாகக் கோரியிருந்தார். இதற்கு மேதகு அரசர் அனுமதியளித்திருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஸ்ரீராஷ்மி, பட்டத்து இளவரசரின் மூன்றாவது மனைவி. இவர்களுக்கு 2001ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இருக்கிறார்.
இளவரசர் ஏற்கனவே ஸ்ரீராஷ்மியைப் பிரிந்துவிட்டாலும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்துகொள்கிறார்கள்.
 
காவல்துறை ஜெனரலாக இருக்கும் இளவரசியின் உறவினர் ஒருவர், கடத்தல், சூதாட்ட மோசடி ஆகியவற்றின் மூலம் பெருமளவில் சொத்துக்களைக் குவித்ததாக, சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார்.
 
இளவரசியின் உடன் பிறந்தவர்கள் நான்கு பேரும் வேறு இரண்டு உறவினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டத்து இளவரசர் அரசராகும்போது, ஸ்ரீராஷ்மிதான் அரசியாவார் என எதிர்பர்க்கப்பட்டது.
 
தாய்லாந்தின் அரசியலில் அரச குடும்பத்தின் நிலை மிக முக்கியமான ஒன்று. அந்த நாட்டிற்குள் இருந்தபடி, அரச குடும்பத்தைப் பற்றி எழுதுவது இயலாத காரியமாகவே இருக்கிறது.
 
அரச குடும்பத்தைப் பற்றிய எந்த ஒரு விமர்சனமும் கிரிமினல் குற்றமாகப் பார்க்கப்படும். தாய்லாந்தின் தற்போதைய அரசரான பூமிபோல், 1946லிருந்து அரசராக இருந்து வருகிறார்.