வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (20:00 IST)

சிஏஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம் - தெலங்கானா அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு தெலங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் ஏழு மணிநேரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியில் தெலங்கானா அரசும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய குடியுரிமை பெறுவதற்கு மதரீதியாக பாகுபாடு காட்டப்பட கூடாது என்று அம்மாநில அமைச்சரவை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

"சட்டத்தின் முன் அனைத்து மதங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குடியுரிமை வழங்குவதில் மத ரீதியிலான பாகுபாட்டுக்கு வழிவகுப்பதோடு, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வதற்குரிய நடவடிக்கைளை எடுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது" என்று தெலங்கானா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் வாரம் நடைபெறவுள்ளதாக கருதப்படும் தெலங்கானா மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய சமிதி கட்சி அதை எதிர்த்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்றால் என்ன?

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடியுரிமை முடியாது.

அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால், இந்த சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது.

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த சட்டத்தில் செய்யப்பட்ட இந்த சர்ச்சையை எழுப்பிய புதிய திருத்தம்,
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துகள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிடுகிறது.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முஸ்லிம் மதத்தவர் மட்டும் தவிர்க்கப்பட்டதே இப்போதைய சர்ச்சைக்கு காரணம்.