செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:12 IST)

நல்லெண்ண அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர்: கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

தமிழகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை. அதனால், பற்றாக்குறை காலங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன்பு மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் ஆப்தே ஆஜரானார். தமிழக மனு மீது கர்நாடகம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழகத்துக்கு அவகாசம் வேண்டும் என்று கோரினார்.

கர்நாடக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதுமானதாக இல்லை என்றும், தமிழகத்துக்கு விட இயலாது என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், தமிழகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில் தண்ணீரைத் திறந்துவிடுவது பற்றி கர்நாடகம் ஏன் பரிசீலிக்கக் கூடாது என நீதிபதிகள் கேட்டனர். நாமும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைப்போம் என்ற அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.