வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 8 டிசம்பர் 2014 (20:17 IST)

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது

இலங்கையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சே மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட இரண்டு ஆட்சேபணைகளை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய திங்களன்று அறிவித்தார்.
இன்று ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்பு இந்த ஆட்சேபணைகள் முவைக்கப்பட்டன. டாக்டர். விக்கிரம்பாகு கருணாரத்ன மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும், நாத் அமரகொன் என்பவரினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் ஆட்சேபணைகளை சமர்ப்பித்திருந்தனர்.
 
ஆயினும் இந்த இரண்டு ஆட்சேபணைகளையும் நிராகரிப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளதாக அறிவித்தார் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமத்.
 
இந்த இரண்டு ஆட்சேபணைகளும் ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான சட்டவிதிமுறைகளுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாத காரணத்தினால் இந்த ஆட்சேபணைகளை நிராகரிப்பதற்குத் தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமத் தெரிவித்தார்.
 
ஜானாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் ஆணைய தகவல்களின்படி இந்த தேர்தலில் போட்டியிட 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் இரண்டு சுயாதீன குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
 
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த பிறகு கருத்துக்களை தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நீதியாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களம் மற்றும் காவல்துறைத்திணைக்களம் ஆகியவை மட்டும் முயன்றால் போதாதென்றும், அரசியல் கட்சிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பும் இதில் தமக்கு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
சட்டவிரோத தேர்தல் பிரச்சார நவடிக்கைளை தவிர்த்துக் கொள்ளுமாறும், ஊடக நிறுவனங்கள் தேர்தல் காலப் பகுதியில் தேர்தல்கள் ஆணையாளர் விடுக்கவுள்ள வழிகாட்டு நெறிகளுக்கு அமைய செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
 
அரச சொத்துக்கள், அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறிய தேர்தல்கள் ஆணையாளர், அரச அதிகாரிகள் தனது கடமை நேரங்களின்போது எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.
 
பலத்த பாதுகாப்பு மத்தியில் நடைபெற்ற இந்த வேட்பு மனு தாக்கல் காரணமாக ராஜகிரிய தேர்தல் செயலகம் அமைந்துள்ள பகுதியில் பிரதான வீதிகள் மூடப்பட்டதுடன் நுற்றுக் கணக்கான அரசியல் கட்சி ஆதரவாளர்கள் சுற்றுப்புறங்களில் கூடியிருந்தனர்.
 
1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப் பட்ட பின்பு அந்த பதவிக்காக ஏழாவது முறையாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.