1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2015 (20:16 IST)

இந்தியாவிடம் சிலையை ஒப்படைக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூரின் அருங்காட்சியகம் ஒன்று தம்மிடமுள்ள பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை ஒன்றை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
 

 
தி ஆசியன் சிவிலைசேஷன் மியூசியம் என்ற அருங்காட்சியகம் இந்த சிலையை 2007ஆம் ஆண்டில் ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட் என்ற நியூ யார்க்கைச் சேர்ந்த கலைப்பொருள் நிறுவனத்திடமிருந்து 4 லட்சத்து 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கியது.
 
அதற்குப் பிறகு, திருடப்பட்ட இந்தியக் கலைப் பொருட்களையும் தாங்கள் விற்பனை செய்ததாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒப்புக்கொண்டார். இந்த உமா மகேஸ்வரி சிலையும் அதில் அடக்கம்.
 
சிலைகளைக் கடத்தி விற்பதாக இந்த நிறுவனம் மீது 2012ஆம் ஆண்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டபதுதான் இந்த விவகாரம் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.
 
இந்துக் கடவுளான உமா மகேஸ்வரியின் இந்தச் சிலை, தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
இந்தியாவின் தொல்லியல் துறைக்கும் சிங்கப்பூரின் நேஷனல் ஹெரிடேஜ் வாரியத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தச் சிலையைத் திருப்பி அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டது.
 
இந்தச் சிலையைத் திரும்பக் கோரி, இந்தியத் தொல்லியல் வாரியம் கடந்த மே மாதம் கடிதம் அனுப்பியதாக அந்த அருங்காட்சியம் தெரிவித்துள்ளது.
 
"தமிழ்நாட்டில் இருக்கும் சிவன் கோவிலில் இருந்துதான் இந்தச் சிலை திருடப்பட்டது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லையென்றாலும் 150 திருடப்பட்ட கலைப் பொருட்களை வைத்திருந்ததாக ஆர்ட் ஆஃப் த பாஸ்ட் நிறுவனத்தின் நிர்வாகி ஆரோன் ஃப்ரீட்மேன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை ஆசியன் சிவிலைசேஷன் மியூசியம் கவனத்தில் கொண்டது" என அந்த அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
அந்த குறிப்பிட்ட கலைப் பொருட் விற்பனையாளரிடமிருந்து 30 பொருட்கலை இந்த அருங்காட்சியகம் வாங்கியது. ஆனால், மற்ற பொருட்கள் எதுவும் திருடப்பட்டதாக பட்டியலிடப்படவில்லை. இந்தச் சிலைகளையும் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்த மோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்திடமிருந்து நஷ்ட ஈட்டைப் பெற அருங்காட்சியகம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது.