1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: புதன், 29 அக்டோபர் 2014 (12:39 IST)

'பாலியல் லஞ்சம் கோரியோர் பிடிபட்டால் கடுமையான தண்டனை'

இலங்கையில் தேசிய கிரிக்கெட் அணிக்கு பெண்களை சேர்த்துக்கொள்வதற்கு அதிகாரிகள் 'பாலியல் லஞ்சத்தை' எதிர்பார்ப்பதாக அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பிபிசி தமிழோசையிடம் கூறியுள்ளார்.
 
அதிகாரபூர்வமாக முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படாதபோதிலும், ஊடகங்களில் வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்துவருவதாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு அதிகாரி ஜயந்த அமரசிங்க பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை அவசரக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மொஹான் டி சில்வா, செயலாளர் நிஷாந்த ரணதுங்க, துணைச் செயலாளர் ஹிரந்த பெரேரா மற்றும் தேசிய தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய ஆகிய நான்கு பேரடங்கிய குழுவொன்று இந்த குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.
 
'பெண்களால் விளையாட முடியாத அளவுக்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என்றும் விளையாடுவதற்குரிய மனநிலையில் அவர்கள் இல்லை என்றும் தொடர்ச்சியாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
 
அதன்படி, தேசிய தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரியவைத் தொடர்புகொண்டு இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றைத் தரும்படி கேட்டிருக்கின்றேன்' என்றார் அமைச்சர் அளுத்கமகே.
 
சனத் ஜயசூரிய புதன்கிழமை இதுபற்றிய அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிப்பார் என்றும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.
கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.