வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (20:02 IST)

அன்புமணி ராமதாஸ் மனு தள்ளுபடி; தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?

மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 

 
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் வி.கோபாலா கௌடா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக நடைபெற்ற விசாரணையில், வழக்கு நடைபெறும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திலேயே முறையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதே வழக்கு தொடர்பான விசாரணை கடந்த அக்டோபர் 20ஆம் தேதியன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போதும், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
 
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், உத்தரப்பிரேதச மாநிலத்தின் தலைநகர் லக்னோ மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் பெருநகரான இந்தூர் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டிருந்த 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு, முறைகேடாக அனுமதி அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இதுதொடர்பான விசாரணை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற போது, அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
 
இந்நிலையில், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அன்புமணி ராமதாஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்தக் கோரிக்கையை, உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அன்புமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.