வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (20:46 IST)

ஈழம் தொடர்பான திரைப்படத்திற்கு இந்தியாவில் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு இந்தியத் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிக்க மறுத்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
 

 
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வசித்த ஊடகவியலாளரான இசைப்பிரியா என்ற பெண்ணின் கதையைப் பின்னணியாக வைத்து, போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படத்தை கணேசன் என்ற இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
 
இந்தப் படம் நிறைவடைந்து, தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது, சான்றிதழ் அளிக்க தணிக்கைக் குழு உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். மறு ஆய்வுக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டபோதும், அங்கும் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
 
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் காட்சிகளைப் பதிவுசெய்யும் படமாக இதனை, தான் உருவாக்கியிருப்பதாக படத்தின் இயக்குனர் கணேசன் பிபிசியிடம் தெரிவித்தார். இலங்கையைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி தங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டதாகக் கூறுகிறார் கணேசன்.
 
இந்தத் திரைப்படம் மறு ஆய்வுக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டபோது, அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய மத்திய தணிக்கை வாரியத்தின் உறுப்பினர் எஸ்.வி.சேகரிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, இந்தத் திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள், பாலியல் பலாத்காரக் காட்சிகள், கோரமான காட்சிகள் அதிகம் இருந்ததாலேயே சான்றிதழ் மறுக்கப்பட்டதாகக் கூறினார்.
 
அடுத்தகட்டமாக, இந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்கான சட்டபூர்வமான முறைகளில் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் கணேசன்.
 
இந்தியாவில் பிராந்திய அளவில் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டால், தேசிய அளவில் மறு ஆய்வுக்கு கோர முடியும். அங்கும் மறுக்கப்படும் நிலையில், படத் தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுக முடியும்.
 
ஏற்கனவே, குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட இலங்கைப் பின்னணியில் உருவான சில திரைப்படங்கள் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் சிக்கல்களை சந்தித்துள்ளன.