வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Updated : சனி, 13 டிசம்பர் 2014 (14:12 IST)

வேர்களை வெறுக்கும் விழுதுகள்: பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்

கால் நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக் கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன.
 


 
தமிழ் நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக் கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சாரப் பின்னணியை ஆராயும் பெட்டகத் தொடரின் முதல் பகுதி.
 
"100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?"
 
மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
 
இந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன.
 
இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.
 
இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை.
 
அப்படியே பேசினாலும்....

அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்லப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.


 
 
தற்கொலைத் தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம் மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை.
 
பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாகக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள்.
 
சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.
 
ஆனால் முதியோர் இல்லங்களின் பராமரிப்பு சூழலோ அப்படி ஒன்றும் நல்லபடியாக இல்லை. குறிப்பாக இலவச முதியோர் இல்லங்களின் நிலைமை மோசமாகவே இருக்கிறது. கவுரவமான சிறைக்கூடம் என்று வர்ணிக்கும் அளவுக்குத்தான் சில முதியோர் இல்லங்களின் இருப்பு இருக்கிறது.
 
இப்படியான முதியோர் இல்லம் தேடிச்செல்ல விரும்பாத அல்லது முடியாதவர்கள் அல்லது முதியோர் இல்லத்தில் இடம் கிடைக்காதவர்கள் தமது பிள்ளைகளுடன் தொடர்ந்து இருக்க நேரும்போது செய்யவேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் ஏராளம். 
 
குறைந்தபட்சத் தேவையான மூன்றுவேளை சாப்பாட்டு கூட பல முதியவர்களுக்கு ஒழுங்காக கொடுக்கப் படுவதில்லை.
 
முதியோர் அனைவருக்கும் நிதியுதவி அளிக்க முடியுமா?
 
இப்படியாக, 21ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சமூக அவலமாக மாறிக்கொண்டிருக்கும் முதியோர் பராமரிப்புக்கு பின்னால் வலுவான பொருளாதார காரணிகளும் இருக்கின்றன.
 
உதாரணமாக தமிழக அரசு மாதந்தோரும் ஏழை முதியோர் பராமரிப்புக்காக ஆளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை தருகிறது. இந்த உதவித் தொகையை தமிழ்நாட்டின் 75 லட்சம் முதியவர்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை எழுப்புகிறார்கள். 
 
ஆனால் அப்படி செய்ய வேண்டுமானால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதியில் 10 சதவீதம் அதற்கு மட்டுமே செலவாகும். அவ்வளவு நிதிவசதி தமிழக அரசிடம் இல்லை. விளைவு பல முதியோர்களுக்கு இந்த நிதிஉதவி கிடைக்கவில்லை.
 
அதேபோல முதியோருக்குத் தேவைப்படும் சிறப்பு மருத்துவ வசதிகளும் தமிழ்நாட்டில் போதுமானதாக இல்லை. இருப்பவையும் தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கின்றன. கிராமப்புற முதியவர்கள் தான் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்.
 
பெண் முதுமை என்னும் பெருஞ்சுமை இதில் கூடுதலான கவலை தரும் அம்சம் என்னவென்றால், ஆதரவு தேவைப்படும் முதியோரில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.
 
இத்தகைய வயதான மூதாட்டிகள் பலருக்கு ஓய்வூதியமும் இல்லாமல், உடல் நலமும் குறைந்த நிலையில் தனிமை சூழ் முதுமை பெரும் பாரமாக இருந்து அவர்களை அழுத்துகிறது.