வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2015 (13:15 IST)

சம்பள உயர்வுக்கு தோட்ட முதலாளிகள் தயங்குவது ஏன்?

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்தம் காலாவதியாகி 9 மாதங்களாகின்ற நிலையிலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் தோட்டக் கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
 

 
தற்போதுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் தொழிற்சங்கங்கள் கோருகின்ற சம்பள உயர்வை வழங்க முடியாது என்று தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனிடையே, தோட்ட நிறுவனங்கள் நஷ்டத்தைக் காரணம் காட்டி சம்பள அதிகரிப்புக்கு மறுத்தால், அவ்வாறான தோட்டங்களை அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தொழில் அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.
 
இந்தப் பின்னணியில், வழமையான சம்பள அதிகரிப்புக்கு இணங்க மறுத்துள்ள தோட்ட நிறுவனங்களின் கடுமையான நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்று இலங்கை தோட்டக் கம்பனிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைவர் ரொஷான் ராஜதுரையிடம் பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியது.
 
கடந்த சம்பள அதிகரிப்புக்குப் பின்னர் தேயிலை மற்றும் றப்பர் விலை உலக சந்தையில் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
 
அதனால், தொழிற்சங்கங்கள் கோருகின்ற வழமையான சம்பள அதிகரிப்பு முறைக்கு இணங்க முடியாது என்றும், வருமான பங்கீடு மற்றும் உற்பத்தித் திறன் அடிப்படையிலான புதிய முறை மூலம் சம்பளத்தை அதிகரிக்கத் தயார் என்றும் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
 
தனியார் தோட்டங்களை அரசு பொறுப்பேற்கும் யோசனை வெற்றியளிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
 
ஏற்கனவே அரசு வசமுள்ள தோட்டங்கள் சட்டரீதியான கொடுப்பனவுகளை கொடுக்கமுடியாத நிலையில் திணறுவதாகவும் இலங்கை தோட்டக் கம்பனிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.