வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (16:47 IST)

ஐஎஸ்ஐஎஸ் வெளிநாட்டுப் போராளிகளில் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் - பகீர் செய்தி

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள வெளிநாட்டுப் போராளிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்று ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுயுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் சுமார் 40 பெண்கள் பயங்கரவாதத்தில் பங்கேற்றுள்ளனர் அல்லது பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கூடுதலான யுவதிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகிறார்.

 
அவ்வகையில் கூடுதலானப் பெண்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள தமது கணவருடன் இணைந்துகொள்வதற்காகவோ அல்லது போராளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகவோ சிரியா மற்றும் ஈராக்குக்கு பயணமாகிறார்கள் என்று ஜுலி பிஷப் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அவர்கள் நாடு திரும்பினால், அவர்களாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாலும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் கவலையடைந்துள்ளனர். சிரியா மற்றும் இராக்கில் டஜன் கணக்கான ஆஸ்திரேலியப் பிரஜைகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்காக சண்டையிட்டு வருகின்றனர் என்று நம்பப்படுகிறது.
 
அங்கு செயல்படும் வெளிநாட்டுப் போராளிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்று ஜூலி பிஷஃப் அம்மையார் புதன்கிழமை தெரிவித்தார். ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்பில் பெண்கள் சேர்வார்களா எனும் கேள்வி தர்க்கத்துக்குகூட உதவாது என அவர் மேலும் தெரிவித்தார்.
 
படுகொலைகளுக்கு அப்பாற்பட்டு, பாலியல் அடிமைகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கட்டளைகளை பிறப்பித்துள்ளது என்று ஏபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பெண்களை அடிப்பது, பாலியல் பலாத்காரம் செய்வது குறித்துக்கூட அவ்வமைப்பு கட்டளைகளை வெளியிட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.