வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2015 (19:56 IST)

நரேந்திர மோடி பாகிஸ்தான் செல்கிறார்

2016ஆம் ஆண்டில் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானிற்குச் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இடையே ரஷ்யாவில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக நவாஸ் ஷெரிப் விடுத்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
இதுதவிர, தீவிரவாதம் உள்ளிட்ட ஏனைய பிரச்சனைகளிலும் தீர்வினை எட்டுவதற்காக ராணுவ உயர் அதிகாரிகள் அவ்வப்போது சந்தித்துப் பேசவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தற்போது ரஷ்யாவில் இருக்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்டுள்ள அவர், அதில் பங்கேற்க வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்போடு நடைபெற்ற சந்திப்பிலும் கலந்துக்கொண்டார்.
 
ஏற்கனவே இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைகளில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்றிருக்கும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், இந்த சந்திப்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தீவிரவாத தாக்குதல்கள் தொடரும் சமயத்தில், பேச்சுவார்த்தை நடத்துவது தவறு என்று கூறியிருந்த மோடியின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
இரு நாட்டுப் பிரதமர்களின் சந்திப்பு ஒருபுறமிருக்க, இருநாடுகளின் தேசிய பாதுக்காப்பு ஆலோசகர்களும் இன்று சந்தித்துப் பேசினர். தொடர்ந்தும்கூட இவ்விருவரும் புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்ஷங்கர் மற்றும் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலர் ஐசாஸ் அகமத் சௌத்ரி ஆகியோர் இன்று ரஷ்யாவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தத் தகவல்கள் உறுதிசெய்யப்பட்டன.
 
மேலும், இருநாடுகளிலும் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் விடுவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.