செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (06:07 IST)

ஆஸ்திரேலியர்கள் இருவர் மரண தண்டனைக்காக சிறை மாற்றம்

இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல் காரர்களான சான் மற்றும் சுகுமாரன் ஆகிய இருவரும் பாலி சிறையிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


விரைவில் துப்பாக்கி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கும் ஒன்பது பேரில் சானும் மயூரன் சுகுமாரனும் அடக்கம்.
 
இவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது என ஆஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
 
பாலியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஹெராயினைக் கடத்த முயன்றபோது பிடிபட்ட இவர்கள் இருவரும் 2005ஆம் ஆண்டில் தண்டிக்கப்பட்டனர்.
 
போதைப் பொருள் வர்த்தகம் இந்தோனேஷியாவில் பலரது வாழ்க்கையைச் சீரழிக்கிறது. தண்டிக்கப்பட்டவர்களுக்குத் தான் கருணை காட்டப்போவதில்லையென அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
 
பாலியிலிருக்கும் கெரோபோகன் சிறையிலிருந்து இன்று அதிகாலையில் சானும் சுகுமாரனும் கவச வாகனங்களில் ஏற்றப்பட்டு நுஸகம்பன்கன் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மரண தண்டனை அங்குதான் நிறைவேற்றப்படும்.


 
 
இந்த வாகனம் சென்ற பிறகு, சானின் சகோதரர் மைக்கல், சுகுமாரனின் தாய் ராஜி ஆகியோர் சிறைக் காவலர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
 
அவர்கள் குற்றவாளிகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லையென ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
மரண தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என தெளிவாகத் தெரியவில்லை.
அவர்கள் மிக மோசமான குற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், ஆனால், தாங்கள் மரண தண்டனையை ஏற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
 
இந்த இருவருடன் மரண தண்டனை விதிக்கப்பட்ட 45 வயதாகும் நைஜீரிய ஆண் ஒருவரும் ஸ்பெயினைச் சேர்ந்த 30 வயதுப் பெண் ஒருவரும் பாலி சிறையிலிருந்து இவர்கள் இருவருடன் சேர்ந்து மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
 
சான், சுகுமாரன் ஆகிய இருவரும் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்திவிட்டதாகவும் அதனால் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
 
ஆஸ்திரேலியா கோரிக்கை
 
இம்மாதத் துவக்கத்தில், தற்போது உயிரோடு இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி கோரினர்.
 
பிரெசில், ஃப்ரான்ஸ் நாட்டுக் குடிமக்களும் இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கிக் காத்திருக்கும் நிலையில், இவ்விரு நாடுகளும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.
 
இந்தோனேசியத் தூதரை அழைத்து பிரான்ஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
பிரெசிலுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியத் தூதரை ஏற்பதற்கு அந்நாட்டு அதிபர் மறுத்துவிட்டார்.
 
இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், 9 வெளிநாட்டவரும் ஒரு இந்தோனேசியரும் கொல்லப்படுவார்கள்.
 
அந்நாட்டின் தற்போதைய அதிபர் விடோடோ பதவிக்கு வந்த பிறகு, போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்கொள்ளும் இரண்டாவது குழு இது.
 
ஜனவரி மாதத்தில் 5 வெளிநாட்டவர் உள்ளிட்ட ஆறுபேருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
நெதர்லாந்து, பிரெசில் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் அடக்கம் என்பதால், இந்தத் தண்டனைகள் ராஜதந்திர உறவுகளைக் கடுமையாகப் பாதித்திருப்பதாகக் கூறி, இந்தோனேசியாவுக்கான தங்கள் தூதர்களைத் திரும்ப அழைத்துக்கொண்டன.
 
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக உலகிலேயே மிகக் கடுமையான தண்டனைகளைக் கொண்டிருக்கும் மிகச் சில நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. மரண தண்டனைக்கு நான்கு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2013ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் மரண தண்டனை வழங்கப்பட்டுவருகிறது.