வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (21:21 IST)

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை அளித்ததாக அமித் ஷா சொன்னது சரியா?

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
 
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். இந்தக் கருத்து சரியானதுதானா?
மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, தி.மு.கவைச் சேர்ந்த திருச்சி சிவா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இலங்கை அகதிகளுக்கும் குடியுரிமை அளிக்க முடியாத வகையில் மசோதா இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர்.
 
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பல உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். நான் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. இருந்தாலும், வைகோ, திருச்சி சிவா போன்றவர்கள் இது குறித்துக் கேட்டார்கள். 1947ல் இருந்து இந்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது.
 
பல கட்சிகள் இதைச் செய்திருக்கின்றன. முதலில் 4,61,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. பிறகு, 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. பிறகு, ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். அவர்களில் 75 ஆயிரம் பேர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். 75 ஆயிரம் பேர் இந்தியாவிலேயே வைத்துக்கொள்ளப்பட்டார்கள். இரண்டு லட்சத்து 16 ஆயிரம் அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். சிலர் இன்னும் இங்கே இருக்கிறார்கள். ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
 
உள்துறை அமைச்சர் சொல்வதைப்போல உண்மையில் இலங்கைத் தமிழர்கள் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.
 
அமித் ஷா இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்களையும் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
"1964ஆம் ஆண்டில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்திற்குப் பிறகு மலையகத் தமிழர்கள் நாடு திரும்பியதைத்தான் அமித் ஷா குறிப்பிடுகிறார்" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.
 
கண்டி ராஜ்யம் உள்பட ஒட்டுமொத்த இலங்கையும் 1815ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த நிலையில், 1840ல் இயற்றப்பட்ட Waste Land ordinance விவசாயம் செய்யாத பகுதிகளை வெற்று நிலங்கள் என்று வகைப்படுத்தி, மிகக் குறைந்த விலையில் பிரிட்டிஷ் முதலீட்டாளர்களுக்கு விற்க வழிவகுத்தது. இந்த நிலத்தில் இருந்த காடுகளை அழித்து காபி, தேயிலைத் தோட்டங்களை உருவாக்க இலங்கையில் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில், அருகிலிருந்த தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அழைத்துவரப்பட்டனர்.
 
1881லிருந்து 1900க்குள் பெரும் எண்ணிக்கையில் இந்தியத் தமிழர்கள் காபி, தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்தனர். இலங்கையின் மக்கள் தொகையில் இவர்கள் கிட்டத்தட்ட 10 சதவீதமாக உயர்ந்தனர். இந்த நிலையில், 1939ல் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்புவதை இந்திய அரசு தடை செய்தது.
 
சித்தரிப்பு படம்
இருந்தபோதும், 1924லிருந்தே இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். 1932ல் நாடு திரும்பும் இந்தியத் தொழிலாளர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டதும் அதனைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையில் பல தொழிலாளர்கள் நாடு திரும்பினர். 1924ல் இருந்து 1939வரை மொத்தமாக 64,704 பேர் நாடு திரும்பினர். ஆனால், இலங்கைக்குச் சென்ற தொழிலாளர் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், நாடு திரும்பிய தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்திற்கும் குறைவு.
 
இந்த நிலையில் இலங்கையில் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகள் அளிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் சிலோன் இந்திய காங்கிரசைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களை தோட்டத் தொழிலாளர்கள் தேர்வுசெய்தனர். மேலும் 15-20 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தனர்.
 
இந்திய தோட்டத் தொழிலாளர்கள் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சிபெறுவதைக் கண்ட இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக, 1948ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் தவிர்த்த பிற இலங்கையர் மட்டுமே இலங்கையின் குடிமக்கள் என்ற வகையில் இந்தச் சட்டம் குடியுரிமையை வரையறுத்தது. 1949ல் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டம், இந்திய வம்சாவளியினரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கச் செய்தது.
 
இதற்குப் பிறகு, இந்தப் பிரச்சனையை சரிசெய்யும் விதத்தில் இந்திய - பாகிஸ்தான் குடிமக்கள் பதிவுசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் 8,50,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும் இதில் ஒரு லட்சம் பேருக்கே குடியுரிமை வழங்கப்பட்டது. மீதமிருப்பவர்கள் நாடற்றவர்களானார்கள்.
 
1964வரை இந்தப் பிரச்சனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 1964ல் இலங்கையில் சுமார் 9,75,000 பேர் நாடற்றவர்களாக இருந்தனர். இந்த நிலையில், இவர்களில் 8,25,000 பேருக்குப் பொருந்தும் வகையில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கையின் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயகவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தனர். அதன்படி, 3,00,000 நாடற்றவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் இலங்கை குடியுரிமை வழங்கும். 5,25,000 பேரை இந்தியா திரும்ப ஏற்றுக்கொள்ளும். மீதமிருந்த, 1,50,000 பேரைப் பற்றி ஏதும் ஒப்பந்தத்தில் சொல்லப்படவில்லை.
 
இதற்குப் பிறகு எஞ்சியிருந்த 1,50,000 இந்திய வம்சாவளித் தமிழர்களில் தலா 75000 பேருக்கு குடியுரிமை வழங்க இரு நாடுகளும் 1974ல் ஒப்புக்கொண்டன. ஆக, ஒட்டுமொத்தமாக இந்தியா 6,00,000 பேரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
ஆனால், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது, இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோர் தாங்களாகவே அதைச் செய்ய வேண்டும். அரசு யாரையும் வலியுறுத்தக்கூடாது என்பதுதான் . 1968வாக்கில் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியா திரும்பத் துவங்கினார். ஆனால், 1986வாக்கில் இந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், வெறும் 5,06,000 பேர் மட்டுமே இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தனர். இதனால், இந்தியாவின் பங்கில் மீதமிருந்த 94,000 பேரையும் இலங்கை ஏற்றுக்கொண்டது.
 
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை வழங்கியதாக சுட்டிக்காட்டுவது இந்த இந்திய வம்சாவளியினரைத்தான். இவர்கள் இந்தியாவிலிருந்து சென்று இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த இந்தியத் தமிழர்களே தவிர, இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் அல்ல.
 
தவிர, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்ட பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த ஒருவருக்குமே இந்தியக் குடியுரிமை அளிக்கப்படவில்லை. சட்டப்படி அதற்கான வாய்ப்புகளும் இல்லை என்கிறார் க்ளாட்ஸன் சேவியர்.
 
"இந்தியச் சட்டப்படி குடியுரிமை பெற சில வழிகளே இருக்கின்றன. ஒன்று, சட்டபூர்வமாக குடியுரிமை உள்ள இந்தியப் பெற்றோருக்குப் பிறந்திருக்க வேண்டும். அல்லது, இந்தியாவில் வசிக்கத் தகுதிபெற்ற பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். அல்லது, 11 ஆண்டுகள் இந்தியாவில் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் அல்லது, இந்தியா எந்த நாட்டையாவது தன்னோடு இணைத்துக்கொண்டால் அங்கு வசிக்கும் குடிமக்களாக இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழிகளில் இந்தியக் குடிமகனாக முடியாது" என்கிறார் அவர்.
 
மேலும், தற்போதுவரை இந்தியாவில் அகதிகளுக்கான சட்டம் இல்லையென்பதால் இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்கள் அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகளாக பதிவுசெய்யப்பட்டே முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் ஒருபோதும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவே முடியாது. இந்த பின்னணியில் அமித் ஷா கூறியது முழுக்க முழுக்க தவறான தகவல்.
 
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணருமான டாக்டர் வி. சூர்யநாராயணும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறார். இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக வேலைப் பார்க்கச் சென்று நாடு திரும்பிய தமிழர்களையும் இலங்கைத் தமிழர்களையும் உள்துறை அமைச்சர் குழப்பிக்கொண்டிருக்கக்கூடும் என்கிறார் அவர்.