1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 1 ஜூலை 2014 (15:20 IST)

ஈராக்கிலுள்ள இந்திய செவிலியர்கள் மருத்துவமனையின் அடித்தளத்தில் பாதுகாப்புக்காக உள்ளனர்

ஈராக்கில் நடந்து வரும் தொடர் வன்முறையில் புதிய குண்டு வெடிப்பு தாக்குதல்களினால், திக்ரித் நகரில் உள்ள இந்திய செவிலியர்கள் அவர்கள் பணிபுரியும் மருத்துவமனையின் அடித்தளத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தங்கவைக்கப் பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISIS போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் திக்ரித்தின், இந்த மருத்தவமனையில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர்.

அந்த மருத்துவமனை வளாகத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து, மருத்துவமனையின் அடித்தளத்தில் அடைக்கலம் பெறுமாறு ஒரு போராளி தங்களிடம் கூறியதாக செவிலியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு திரும்ப வேண்டுமா அல்லது ஈராக்கிலேயே நெருக்கடி இல்லாத பகுதிகளில் தங்கிவிட வேண்டுமா என்ற மனக் குழப்பத்தை பல செவிலியர்கள் எதிர்கொள்கின்றனர்.

அந்த மருத்துவமனை வளாகத்தில் புதிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஏற்பட்டதாக, மரியானா ஜோஸ் என்ற அந்த மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு செவிலியர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சமையலறை அமைந்துள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில், தங்குமிடம் எற்படுத்திக் கொள்ளுமாறு ஒரு போராளி தெரிவித்ததாக, மரியானா ஜோன்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பயமாக உள்ளதாகவும், அடித்தளத்தில் எவ்வாறு தங்குவதெனத் தெரியவில்லை என்று அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் அருகே குண்டு வெடிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். குண்டு வெடிப்புகள் தொடங்கிய உடனேயே அந்த போராளிகளில் ஒருவர், பாதுகாப்புக்காக அடித்தளத்தை நோக்கி தன்னை பின்பற்றி செல்லுமாறு தெரிவித்ததாக அந்த செவிலியர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ஏனைய ஆயுததாரிகளுடன் சேர அந்த நபர் வெளியே சென்றுவிட்டதாகவும், மருத்துவமனையில் உள்ள ஈராக்கிய உதவியாளர்களும் அடித்தளத்தில் இருப்பதாகவும் அந்த செவிலியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்கள் இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டதாகவும், ஈராக்கிய ராணுவம் மற்றும் ரெட் கிராஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக இந்திய தூதரகத்தில் உள்ளவர்கள் தெரிவித்ததாகவும் அந்த செவிலியர் தெரிவித்தார்.

அடித்தளத்தில் சிக்கியுள்ள இந்திய செவிலியர்கள் குறித்து ஈராக்கிய பொது மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பாக்தாத் மற்றும் எர்பில் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள விமான நிலயங்களுக்கு செல்லும் வழியில் உள்ள வீதிகளில், கடந்த மூன்று வாரங்களாக ஈராக்கிய இராணுவத்திற்கும் ISIS போராளிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வருதால், இந்த செவிலியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனையில் எந்த நோயாளிகளும் இல்லை என்றும் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.