சென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு தடை: தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம்

IIT Madras
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified சனி, 30 மே 2015 (15:22 IST)
சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனமான ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் இயங்கிவந்த அம்பேத்கர் பெரியார் ஸ்டடி சர்க்கிள் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஐஐடி - மெட்ராஸின் இந்த தடை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய மாணவர் யூனியன் புதுடெல்லியில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
சென்னை ஐஐடியில் ஏபிஎஸ்சி எனப்படும் அம்பேத்கர்-பெரியார் ஸ்டடி சர்க்கிள் என்ற மாணவர் அமைப்பு ஒன்று இயங்கிவருகிறது. இந்த அமைப்பு மீது பெயர் குறிப்பிடாத சிலர் புகார் தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது.
 
அந்த புகாரில், "ஏபிஎஸ்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசின் கொள்கைகளைப் பற்றி விமர்சித்தும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்து மதத்தினருக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், மே 15ஆம் தேதியன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் பிரிஸ்கா மேத்யூவிடம் இருந்து சென்னை ஐஐடிக்கு, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கோரி ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
 
இதையடுத்து, ஏபிஎஸ்சி அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து சென்னை ஐஐடி உத்தரவிட்டது.
 
இது தொடர்பாக, இந்த அமைப்பைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவி ஒருவரிடம் பேசியபோது, அம்பேத்கர் - பெரியார் என்ற பெயர்களை அமைப்பிலிரு்து நீக்க வேண்டுமென மாணவர்களுக்கான டீன் கூறியதாகத் தெரிவித்தார்.
 
மேலும், சென்னை ஐஐடியில் விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள் போன்ற அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்ற இடவசதி, மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் வசதி போன்றவை தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
 
இது தொடர்பாக ஐஐடியின் கருத்தைப் பெற மாணவர்களுக்கான டீனைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
 
இந்த நிலையில், சென்னை ஐஐடியின் சார்பில் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை ஐஐடி பறிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 
மேலும், விதிமுறைகளின்படி மாணவர் அமைப்புகள் ஐஐடி மெட்ராஸ் என்ற பெயரை தங்கள் அமைப்பின் பெயருடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஏபிஎஸ்சி இந்த விதிமுறையை மீறிதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இம்மாதிரி விதிமுறை மீறல் நடந்தால் அந்த அமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும் என்றும், இப்போதும் அதே வழிமுறையே பின்பற்றப்பட்டிருக்கிறது என்றும் ஐஐடியின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
 
இதற்கிடையில், ஐஐடியின் இந்த நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :