அமெரிக்க எச்1பி மசோதா இந்திய ஐ.டி துறையில் ஏற்படுத்தும் கவலைகள்


bala| Last Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (17:50 IST)
அமெரிக்க பணியாளர்களுக்கு "மாற்றாக" வெளிநாட்டைச் சேர்ந்த உயர் திறன் பணியாளர்களை நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய சட்ட மசோதா முன்மொழியப்பட்டுள்ளது.இந்திய ஊடகங்கள் இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு பின்னடைவு என்று விவரித்துள்ளன்; மேலும் இந்திய அரசு இது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

 

எச்-1 பி விசா என்றால் என்ன?

எச்-1 பி என்ற ஒரு வகை விசா, திறமைவாய்ந்த வெளிநாட்டினர் குறிப்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழிவகை செய்கிறது.
ஆண்டு தோறும் 85,000 எச்-1 பி விசாக்கள் வழங்கப்படுகின்றன; அதற்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் அதில் 20,000 விசாக்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படும்.எச்-1 பி விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பிற்கு விண்ணப்பிக்க முடியும் மேலும் அவர்கள் அங்கு சொத்துக்களை வாங்க முடியும். 2016 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த ரிச்சர்ட் வெர்மா, 70 சதவீத எச்-1 பி விசாக்களை இந்தியர்கள் பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.ஆனால் இந்த விசாவிற்கான தேவை மூன்று மடங்கு அதிகமாகவே உள்ளது. மேலும் எச்-1 பி விசா லாட்டரி முறை மூலமே வழங்கப்படுகிறது.

அமெரிக்கா இந்த புதிய சட்டத்தை விரும்பக் காரணம் என்ன?

எச்-1 பி விசா திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் அதில் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் பல மசோதாக்கள் மற்றும் வரைவு நிறைவேற்று ஆணைகள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிஃபோர்னியாவிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சோ லாஃப்கிரனால் கடந்த வாரம் பிரதிநிதிகள் அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டின் உயர் திறன் நேர்மை மற்றும் சமநிலை சட்டம், லாட்டரி முறையை மாற்றி அதிகமான ஊதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

1989 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட, எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் குறைந்த பட்ச ஊதியமான 60,000 டாலர்களை இரண்டு மடங்குக்கும் மேலாக, அதாவது 130,000 டாலர்களாக அதிகரிக்க அது பரிந்துரை செய்கிறது. விதிவிலக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் அது அரிதாகவே உள்ளது."அமெரிக்க பணியாளர்களுக்கு பதிலாக குறைந்த ஊதியம் பெறக்கூடிய எச்-1 பி விசா பணியாளர்களை நிறுவனங்கள் பணியமர்த்துவதை" நிறுத்தப்போவதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உலக முழுவதிலும் இருந்து சிறந்த மற்றும் பிரகாசமானவர்களை தேர்ந்தெடுத்து, அமெரிக்க தொழிலாளர் படைக்கு வலு சேர்க்கும் வகையில் திறன் வாய்ந்த, அதிக ஊதியத்துடன் மேலும் அமெரிக்காவில் பணிகளை பெறாமல் கூடுதல் பணியிடங்களை உருவாக்கக் கூடிய உயர் திறன் பணியாட்களை கண்டறியும் எச்-1 பி விசாவின் உண்மை நோக்கத்தில் எனது சட்டம் மறு கவனம் செலுத்தும்" என ரெப் லஃப்கிரென் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய தகவல் துறை ஏன் கவலையடைய வேண்டும்?
 


முன்மொழியப்பட்ட புதிய சட்ட மசோதா, அமெரிக்காவிலிருந்து இயங்காத , விசாக்களின் மூலம் வெளிநாட்டு பணியாட்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களை இலக்கு வைக்கிறது. எச்-1 பி விசா பணியாளர்களுக்கான குறைந்த ஊதியத்தை இரட்டிப்பாக்குவது "எச்-1 பி விசா ஊழியர்களை சார்ந்த நிறுவனங்களுக்கு" பொருந்தும் அல்லது எச்-1 பி விசாவில் 15 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கும் அது பொருந்தும். அமெரிக்க நிறுவனங்களான ஐ.பி.எம் போன்றவை இதில் சேர்க்கப்படவில்லை; அவைகள் முந்தைய குறைந்தபட்ச ஊதியத்தில் எச்-1 பி விசா பணியாளர்களை சேர்த்து கொள்ளலாம்; ஏனென்றால் அந்நிறுவனங்களில் எச்-1 பி விசா மூலம் அமெரிக்கக் கிளைகளில் 15 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களே பணியில் உள்ளனர்.இது குறிப்பாக இந்திய நிறுவனங்களை இலக்கு வைப்பதாக உள்ளது. தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பான நாஸ்காம் இது "பாரபட்சமானது" என விவரித்துள்ளது.


இந்த புதிய சட்ட மசோதா, அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள எச்-1 பி விசா பணியாளர்களை சமமாக நடத்துவதாக இல்லை" என நாஸ்காமின் துணை தலைவரும் சர்வதேச வர்த்தக வளர்ச்சியின் தலைவருமான ஷிவேந்திரா சிங் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். "இந்த சட்ட மசோதாவின் நோக்கம் அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பது என்றால் அது இதன் மூலம் நிறைவேறாது. எச்-1 பி விசாவை நம்பியிராத நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் திறன் வாய்ந்த பணியாளர்களை பணிக்கு அமர்த்தி அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தை முறியடித்துவிடும்."

"ஏற்கனவே இந்திய தகவல் தொழிநுட்பத் துறை தனது லாபத்தை அதிகரிக்க போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த மசோதா வந்திருப்பது இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல செய்தியன்று" என இந்திய தகவல் இணைப்பு ஆய்வின் தலைவர் அமர் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகின்றனர்?

இந்த புதிய சட்ட மசோதா, "விசாவை சார்ந்த நிறுவனங்களை" குறிவைப்பதால், இந்திய நிறுவனங்களான டாட்டா கன்சல்டன்சி சர்விஸஸ், இன்ஃபோஸிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை இதனால் பாதிக்கப்படும். செவ்வாய்கிழமையன்று, இந்திய மென்பொருள் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. டிசிஎஸின் பங்குகள் 4.47 சதவீதமாகவும், இன்ஃபோஸின் பங்குகள் 2 சதவீதமாகவும் மற்றும் விப்ரோவின் பங்குகள் 1.62சதவீதமாகவும் குறைந்துள்ளன.

எச்-1 பி விசாவின் மூலம் பணியாளர்களை பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் "விசா சார்பு நிறுவனங்களிலிருந்து" விலக்கப்படும்.
சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதனால் பாதிக்கப்படும்; ஆனால் பாதிப்பின் அளவு குறைவாகவே இருக்கும்; மேலும் அவர்களுக்கு பிற மாற்று வழிகளும் உண்டு. சிங்கப்பூருக்கு எச்-1 பி விசாவை போன்று எச்-1பி1 விசா உள்ளது. அமெரிக்காவும் சிங்கப்பூரும் ஏற்கனவே கையெழுத்திட்டு அமலில் உள்ள , சுதந்திர வர்த்தக ஓப்பந்தம் காரணமாக, சிங்கப்பூர் பிரஜைகளுக்குக் குறிப்பாக பிரச்சனையில்லை.


இதற்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கும்?

அமெரிக்க நிறுவனங்களான கூகுள், டெல், ஹெவ்லெட் - பாக்கர்ட், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் மேலும் சேவை நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் ஆக்ஸன்சர் ஆகியவை இந்தியாவின் தொழில்நுட்ப சந்தையின் பெரும் பகுதியின் மேல் ஆதிக்கம் செலுத்துவதால் இந்த மசோதா சட்டமாக இயற்றப்பட்டால் இந்தியா இதற்கான பதிலடி நடவடிக்கையை எடுக்க முடியும்.இது ஒரு மசோதாவாக மட்டுமே உள்ளதாகவும் மேலும் இது சட்டமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால் இந்தியா இந்த சமயத்தில் அமைதி காக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்திய கூட்டமைப்புகள் அல்லது அரசாங்கத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டால் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் எச்-1 பி விசா பணியாளர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும்படியான ஒரு நிலை கொண்டு வரப்படும். இந்தியாவின் கணினி மற்றும் திறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) சந்தை பெரிதாக இருப்பதால் இந்தியாவின் எந்த ஒரு பதில் நடவடிக்கையும் அமெரிக்க நிறுவனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் பில்லியன் அலைபேசி பயன்பாட்டாளர்கள் உள்ளதாகவும் அதில் 300 மில்லியனிற்கும் அதிகமானோர் ஸ்மாட்ஃபோன் வைத்திருப்பதாகவும் அது 2019 ஆண்டிற்குள் 600 மில்லியனாக மாறும் எனவும் கருதப்படுகிறது.

மேலும் சமீப மாதங்களில் இந்தியா, இணைய பயன்பாட்டையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளையும் நோக்கி செல்வதால் இது அமெரிக்க மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக 500 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கை கொண்டுள்ளதால் இந்தியாவின் கருத்தை அமெரிக்கா நிராகரிப்பது அவ்வளவு எளிதல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் மேலும் படிக்கவும் :