1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மே 2021 (16:44 IST)

கொரோனோ சீற்றத்துக்கு நடுவில் டோக்டே புயல் சீற்றத்தை எதிர்கொள்ளும் குஜராத், மகாராஷ்டிரா

குஜராத் மாநிலம் டோக்டே புயலின் பாதிப்பை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. டோக்டே புயல் கடந்த 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு குஜராத்தில் வீசப் போகும் மிக வலுவான புயல் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த அதி தீவிரப் புயலினால், பெய்த கன மழையால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்லனர். கடந்த இரண்டு நாட்களில் ஆயிரக் கணக்கானவர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

டோக்டே புயல், மிக கடுமையான சூறாவளிப் புயலாக தீவிரமடைந்து உள்ளதாக இந்திய வானியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் சுகாதார கட்டமைப்பின் மீது பலமான சுமையாக விழுந்திருக்கும் கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில், தற்போது இந்த டோக்டே புயலும் இணைந்து இந்தியாவையே சோதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

டோக்டே புயல் திங்கட்கிழமை இரவு, மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்துடன் வீசும் காற்றோடு, குஜராத்தில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலமான காற்று மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்றே குறையத் தொடங்கி இருக்கிறது, இருப்பினும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீள வில்லை.

தாழ்வான பகுதியில் வாழும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இதனால் வரும் வாரங்களில் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் பல கடலோர நகரங்களில் தடுப்பூசி செலுத்துவது அபாயகரமனது எனக் கருதி, அப்பகுதிகளில் எல்லாம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.

ஏற்கனவே பெருஞ்சவாலை எதிர்கொண்டு வரும் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களுக்கு டோக்டே புயல் மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக மகாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையைக் குறிப்பிடலாம்.

கடலோரத்தில் அமைந்திருக்கும் இந்த பெருநகரம் உச்சபட்ச எச்சரிக்கையோடு இருக்கிறது. மும்பையில் கொரோனாவுக்காக என்றே ஒதுக்கப்பட்ட மையங்களிலிருந்து 580 கொரோனா நோயாளிகள், பாதுகாப்பு கருதி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.