வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Annakannan
Last Modified: புதன், 15 அக்டோபர் 2014 (17:37 IST)

ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டாம் - மோடிக்கு கோரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு தொடர்ந்தும் போதுமான ஆதரவு வழங்க வேண்டும் என்று பல முக்கிய பொருளாதார வல்லுனர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில கட்டுப்பாட்டுகளை அறிமுகப்படுத்தி, அதற்கு கொடுக்கப்பட்டு வந்த ஆதரவை மத்திய அரசு நிறுத்தி விடும் என்று சமீபத்தில் அச்சங்கள் எழுந்த நிலையிலேயே பிரதமருக்கான இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
 
இந்தக் கடிதத்தில், ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் ஒருசில குறைகளைக் கொண்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க பலனைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிராமப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த 2005ஆம் ஆண்டில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அது இன்று வரை அமலில் உள்ளது.
 
நாடு முழுக்க இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும், ஆண்டு முழுவதும் இந்தத் திட்டப் பணிகள் நடைபெறும் என்றும் தேசிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இந்தத் திட்டத்தை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாழ்வாதார விளிம்பில் உள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு பொருளாதாரப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய திட்டம் இது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சமீபத்திய அறிக்கைகளின்படி இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்ததாகக் கூறப்படும் ஊழல் தற்போது குறைந்துள்ளதாகவும், இருக்கும் ஊழலைக் களைந்து, இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் அதிலும் மிகவும் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர் என்றும், இந்தத் திட்டத்தால் பரந்த அளவிலான சமூக நலன்கள் ஏற்படும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.