வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 7 அக்டோபர் 2014 (05:08 IST)

இலங்கை தூதர் தாக்கப்பட்டது குறித்து முறையான விசாரணை தேவை

பிரிட்டனுக்கான இலங்கையின் தூதர் கிறிஸ் நோனிஸ், செப்டம்பர் 24 ஆம் தேதி நியூயார்க்கில் வைத்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் டி வாஸ் குணவர்த்தனவால் தாக்கப்பட்டார் என்கிற புகார் தொடர்பில் இலங்கை அரசு முறையான விசாரணையை நடத்தவேண்டும் என்று ஆளும் கட்சிக்குள்ளேயே கோரிக்கை எழுந்துள்ளது.



நியாயர்க்கில் வைத்து சஜின் டி வாஸ் தன்னை தாக்கியதாக கிறிஸ் நோனிஸ் இலங்கை அரசிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அவரது குற்றச்சாட்டை சஜின் டி வாஸ் குணவர்த்தன மறுத்திருக்கிறார். இந்த பின்னணியில், கிறிஸ் நோனிஸ் தாக்கப்பட்டது தொடர்பான புகார் குறித்து இலங்கை அரசு உரிய விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறியவேண்டும் என்று இலங்கையின் ஆளும்கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. அப்படியானதொரு கோரிக்கையை வலியுறுத்துகிறார் ஆளும்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ராஜீவ விஜயசின்ஹ.
 
இதுகுறித்து பிபிசிக்கு பேட்டியளித்த ராஜீவ விஜயசின்ஹ, இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிபர் மஹிந்த உணர்ந்து அதற்குரிய முறையில் நடவடிக்கை எடுப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கை வெளியுறவுத்துறையின் செயலாளர் இதன் தீவிரத்தை எடுத்துச்சொல்வார் என்றும் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
 
இந்த விசாரணையின் நம்பகத்தன்மை இலங்கை அரசின் மதிப்பை பாதிக்கும்
 
இந்த விவகாரம் தொடர்பில் குறைந்தபட்சம் ஒரு நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். இந்த சம்பவம் குறித்து அரசு உரிய முறையில் விசாரிக்காவிட்டால், இலங்கை போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நடத்தும் விசாரணைகளின் நம்பகத்தன்மை சர்வதேச மட்டத்தில் இன்னும் கூடுதலாக பாதிக்கப்படும். எனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தாமல், புகாருக்குள்ளான சஜின் டி வாஸ் குணவர்த்தனவை காப்பாற்றுவதற்கு இலங்கை அரசு முயன்றால், அது இலங்கை அரசின் ஜனநாயகத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் சர்வதேச மட்டத்தில் ஒருசேரக்குலைத்துவிடும், என்றார் இலங்கை ஆளும்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ராஜீவ விஜயசின்ஹ.
 
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் விளக்கிய கிறிஸ் நோனிஸ், ஏற்கெனவே ஊடகங்களில் விரிவாக வந்திருப்பதைப்போல தாம் செப்டம்பர் 24 ஆம் தேதி நியூயார்க்கில் வைத்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்புப்பணிக்கான நாடாளுமன்ற உறுப்பினரால் சட்டவிரோதமாக தாக்கப்பட்டது உண்மை என்பதை தாம் உறுதி செய்வதாக தெரிவித்தார்.
 
ஜனாதிபதிக்கும் அவர் குடும்பத்துக்மும் தனது விசுவாசம் தொடரும்: நோனிஸ்
 
அதே நாளில் இலங்கை ஜனாதிபதியை தாம் நேரில் சந்தித்து இது குறித்து விவாதித்ததாகவும் தமது ராஜினாமாக்கடிதத்தையும் அன்றே, அதாவது 24 ஆம் தேதியே கையளித்துவிட்டதாகவும் தெரிவித்த கிறிஸ் நோனிஸ், அன்று மாலையே தாம் லண்டனுக்குத் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார். தம்முடைய ராஜினாமா நேற்று (05-10-2014) ஏற்றுக்கொள்ளப் பட்டிருப்பதாகவும் கூறினார்.
 
அதேசமயம் இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் பணி செய்வதற்கான வாய்ப்பை தமக்கு ஏற்படுத்திக்கொடுத்த இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இலங்கை ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்துக்குமான “தமது மாறாத விசுவாசம் அப்படியே நீடிக்கும்” என்றும் கிறிஸ் நோனிஸ் கூறினார்.
 
இவரது இந்த புகாரை இவரால் குற்றம் சாட்டப்படும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் டி வாஸ் குணவர்த்தன ஏற்கெனவே மறுத்திருக்கிறார். கிறிஸ் நோரிஸுக்கும் தனக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது உண்மை என்றும் ஆனால் அவரை தான் தாக்கவில்லை என்றும் அவர் மறுத்திருக்கிறார்.