வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : புதன், 30 ஏப்ரல் 2014 (17:50 IST)

இந்திய மாம்பழங்களை ஐரோப்பிய ஒன்றிய தடை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மாம்பழங்களுக்கும், நீலக்கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சேப்பங்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றரை ஆண்டுகால இறக்குமதித் தடை விதித்துள்ளது.

மே 1ஆம் தேதி தொடங்கி 2015ஆம் ஆண்டு முடியும் வரை இந்த இறக்குமதித் தடை அமலில் இருக்கும்.
 
பழ ஈக்கள், பூச்சிகள்
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள பழ ஈக்கள் மற்றும் பூச்சிகள் இந்த பழங்களிலும் காய்கறிகளிலும் அதிக அளவில் தென்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 2013ஆம் ஆண்டில் ஏற்றுமதியான இப்பழங்கள் மற்றும் காய்கறிகளில் மொத்தம் 207 ஏற்றுமதித் தொகுதிகளில், ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள வகையான வகையிலான பழ ஈக்களும், பூச்சிகளும் காணப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஆணையம் கூறுகிறது.
 
இந்த வகை பூச்சிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பரவினால் அவை அந்நாடுகளின் விவசாய உற்பத்தியில் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இந்தப் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவிக்கிறது.
 
பிரிட்டன்
 
இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி ஆகும் மொத்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஐந்து சதவீதத்தை தற்போது தடை செய்யப்பட்டுள்ள இந்த பழங்களும் காய்கறிகளும் பிரதிபலிக்கின்றன.
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தடையை ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுற்றாடல் மற்றும் உணவு உற்பத்தி பாதுகாப்பு துறையான டெஃப்ராவும் ஆதரித்துள்ளது.
 
இந்தியாவிலிருந்து வரக்கூடிய பழ ஈக்கள் மற்றும் பூச்சிகள் பிரிட்டனில் பரவினால், அந்நாட்டின் சாலட் இலைகள், தக்காளி மற்றும் வெள்ளரி விளைச்சல் பாதிக்கப்படும் என்று டெஃப்ரா வாதிடுகிறது.
 
இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே அறுபது லட்சம் மாம்பழங்களை பிரிட்டன் இறக்குமதி செய்கிறது. இந்த மாம்பழங்களின் பெறுமதி என்பது சுமார் அறுபது கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் பிரிட்டனில் இந்திய சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உணவுப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தடையால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
ஐரோப்பிய ஒன்றியத் தடை அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று முறையிட்டு இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான கீத் வாஸ் ஐரோப்பிய ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
பிரிட்டனை முறையாக கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் இந்திய அரசாங்கத்துடன் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டதா என்று கேட்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
 
தடை விலக்கக்கோரி பிரச்சாரம்
 
மாம்பழத் தடையை ரத்து செய் என்ற கோரிக்கையை வைத்து இணையத்தில் பிரச்சாரம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுடு தண்ணீர், நீராவியைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது, கதிர்களைப் பாய்ச்சி பூச்சிகளைக் கொல்வது போன்ற முறைகளில் பழ ஈக்களையும் பூச்சிகளையும் அழித்துவிட முடியும் என்றும் அவற்றைப் பற்றி பரிசீலிக்காமல் அவசரப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இணைய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள லண்டன் பழ இறக்குமதி நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மோனிகா பண்டாரி தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டனில் இத்தடையை நீக்குவதற்கான முயற்சிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சேர்ந்து முன்னெடுத்து வருவதாக பிரிட்டனின் சுற்றுச்சூழல் அமைச்சர் லார்ட் த மோலீ தெரிவித்துள்ளார்.