வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Suresh
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (15:14 IST)

மின்சக்தி தீரும் தறுவாயில், வால் நட்சத்திரத்தில் ஆய்வு செய்கிறது ஃபிலே

வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய ஃபிலே ஆய்வுக் கலனுடைய மின்கலன் சக்தி ஒரு சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும் என அச்சங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், ஆய்வுக் கலன் அந்த விண்கல்லின் மேற்பரப்பில் துளையிட்டு ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் கூறூகின்றனர்.


 
விண்கல்லின் மேற்பரப்பில் ஆய்வுக்கலன் பிடிமானம் இல்லாமல் நிற்கின்ற சூழ்நிலையில், துளையிடும் கருவியை இயக்கும்போது, ஆய்வுக்கலன் நிலைகுலையலாம் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறுகிறது.
 
ஆபத்தையும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ஏனெனில் இன்றோடு அந்த ஆய்வுக்கலனின் மின் சக்தி வற்றிவிடலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
 
மேட்டுக்கு அடியில் நிழல் விழும் இடத்தில் இந்த ஆய்வுக்கலன் நின்றுகொண்டிருப்பதால், சூரிய சக்தியைப் பயன்படுத்தியும் அதனால் இயங்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
மேற்பரப்பில் துளையிட்டு எடுக்கும் துகள்களை இந்த ஆய்வுக் கலனிலேயே இருக்கும் கருவிகள் இரசாயன ஆய்வுக்கு உட்படுத்தும்.