ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி ஆய்வு நடத்த வேண்டுமா? நீதிமன்றம் கேள்வி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (23:28 IST)
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு கூறியுள்ளது.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், மூன்று உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை வைத்து ஆய்வுசெய்ய வேண்டுமெனக் கோரி தாக்கல்செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி.பார்த்திபன் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து ஆய்வுசெய்ய உத்தரவிட வேண்டுமா என்று கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏன் என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

"மத்திய அரசின் பிரதிநிதிகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியுமென மத்திய அரசின் வழக்கறிஞர் கூறுகிறார். ஆனால், இது தொடர்பான எந்தத் தகவலும் வெளியிடப்படாதது ஏன்" என நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

"ஜெயலலிதா குணமடைந்து வருவதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆவணங்களில் கையெழுத்திட்டார், கூட்டங்களை நடத்தினார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதனால் எங்களுக்கே சந்தேகம் ஏற்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர்.

இதே போன்ற வழக்கு உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் இதே போன்ற வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசு வழக்கறிஞர் முத்துக்குமார சாமி கூறினார்.

அதிமுகவின் உறுப்பினரான பி.ஏ. ஜோசப் ஸ்டாலின் என்பவர் இந்த பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவைப் போல, ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் விசாரிக்கக் குழு அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியிருந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான எல்லா ஆவணங்களையும் அளிக்க மாநில அரசுக்கும் அப்பல்லோ மருத்துவமனைக்கும் இடைக்கால உத்தரவிட வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரியிருந்தார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை உரிய அமர்வுக்கு அனுப்புவதற்காகத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தது. வழக்கு ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதில் மேலும் படிக்கவும் :