வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (21:54 IST)

சீன சுரங்கத் தாக்குதலுக்கு பதிலடி : போலிஸ் தாக்குதலில் 28 பேர் பலி

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் என்று கருதப்படும் 28 பேரை சீன பாதுகாப்புப் படையினர் கொன்றிருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
 

 
56 நாட்களாக நடந்த நடவடிக்கையின்போது ஒருவர் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் 28 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஜின்ஜியாங் மாகாணத்தின் அரச இணையதளமான தியான்ஷன் தெரிவித்துள்ளது.
 
அஸ்கு என்ற இடத்தில் இருந்த சோகன் நிலக்கரிச் சுரங்கத்தில் செப்டம்பர் 18ம் தேதி நடந்த தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
 
உய்குர் இனச்சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் அவ்வப்போது அமைதிக்குலைவு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
 
இந்தப் பிராந்தியத்தில் நிகழும் வன்முறைக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளே காரணம் என சீனா கூறிவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது தொடர்பான வன்முறைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
 
உய்குர் இனத்தவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். தங்களது கலாச்சார, மத பழக்க வழக்கங்களை சீன அரசு ஒடுக்குவதால்தான் வன்முறை வெடிப்பதாக உய்குர்கள் கூறுகின்றனர்.
 
"56 நாட்களாக தொடர்ச்சியாக நடந்த சண்டையின் முடிவில் வெளிநாட்டு தீவிரவாதக் குழுவின் தலைமையில் இயங்கிய தீவிரவாதக் குழு அழிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் சரணடைந்துவிட, 28 பேர் அழிக்கப்பட்டனர்" என ஜின்ஜியாங் நாளிதழ் கூறுவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
 
செப்டம்பர் மாதம் நடந்த இந்த சுரங்கத் தாக்குதலை அமெரிக்க நிதியுதவியின் கீழ் இயங்கும் ரேடியோ ஃப்ரீ ஏசியாதான் முதலில் வெளியிட்டது. குறைந்தது 50 பேர் இதில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியது.
 
சுரங்கத் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கொன்றிருப்பதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா இவ்வாரத் துவக்கத்தில் கூறியது.
 
ஜின்ஜியாங்கில் ஊடகங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதால், தகவல்களை உறுதிசெய்வது கடினமான காரியமாகவே இருக்கிறது.