1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (16:04 IST)

மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவது ஏன்? ஹெச்.ராஜா விளக்கம்

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்காக மாநிலக் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று (ஜூன் 5) வருகை தந்திருந்தார்.
 
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்த அவர், "கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான பிணங்கள் விழும், மோதி சர்க்காரை வீழ்த்தி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. உலக நாடுகள் அனைத்து சீனாவின் மீது கடும் கோபத்தில் உள்ளது.
 
கொரோனா வைரசைத் தவிர்த்து சீனா ஏற்றுமதி செய்த மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து பொருட்களும் போலியானது. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலகட்டத்தில் நாம் வெளிநாடுகளை நம்பாமல் ஆர்டி-பிசிஆர், ரேபிட் கிட், என்95 மாஸ்க் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து மோதி அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது. 120 நாடுகளுக்கு மருத்துவ உதவி செய்துள்ளோம். இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. இதனைச் சமாளிக்கக் கூடிய சூழ்நிலைக்கு வந்துவிட்டோம். வேலையிழப்பைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்," எனத் தெரிவித்தார்.
 
மேலும் தொடர்ந்து அவர், "ஆனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடலாமா? எப்படியாவது இந்த நாட்டில் மக்களுடைய போராட்டத்தைத் தூண்டிவிட வேண்டும். அதற்குச் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் துணை போகலாமா? ரயில், பேருந்து மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அதுவரை தொழிலாளர்கள் பொறுமை காக்க வேண்டும்," என்கிறார் ஹெச்.ராஜா.
 
யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுவது குறித்து ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
 
அப்போது அவர் பதிலளிக்கையில், "கேஸ் இணைப்பை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என அறிவிப்பு செய்தது. அதற்காக மக்கள் முழு விலை கொடுத்து கேஸ் வாங்கிக் கொள்ள வேண்டும். மானியம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என 6 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னபோது, உடனே மத்திய அரசைக் கம்யூனிஸ்ட்டுகள் விமர்சித்தார்கள். அவர்களை மாதிரி கார்ப்ரேட்டு கம்பெனிகள் யாரும் கிடையாது. மிகப்பெரிய சொத்து வைத்துள்ள கட்சியே கம்யூனிஸ்ட்தான். ஆனால், 6 ஆண்டுகளாக மக்களுக்கு மானியம் கிடைக்கிறது. வீடுகளுக்கு மானியத்தில் கொடுக்கிற கேஸ் இணைப்பை ஓட்டல்களும் மற்றும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனை நிறுத்தவே, கேஸ் இணைப்பை வங்கிக் கணக்கோடு இணைத்தோம்," என்று கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், "இதேபோல், வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் மின் இணைப்பிலிருந்து வர்த்தகத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டது. எனவேதான், மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீட்டர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அது வந்தவுடனே இலவச மின்சாரத்தை மத்திய அரசு நிறுத்த போகிறது எனக் கூறுகின்றனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு மோதி அரசு விரோதமானது கிடையாது. குஜராத்தில் இலவச மின்சாரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிறது. மாநில அரசு மானியம் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த முடியாது. மின் திருட்டைத் தடுப்பதற்காகத் தான் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படுகிறது.
 
எனவே, புதுச்சேரி, தமிழ்நாடு என எந்த மாநில அரசும் வழங்குகின்ற மானியத்தை எந்த சக்தியாலும் நிறுத்த முடியாது. மத்திய அரசும் அதனை நிறுத்த அனுமதிக்காது," எனத் தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா.