அடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டா?

Webdunia|
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

தற்போதைய வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்து, பாவங்களை தவிர்த்தால், அடுத்த ஜென்மத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று சிலர் கூறுகின்றனர். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?

பூர்வ ஜென்மம், தற்போதைய ஜென்மம், அடுத்த ஜென்மம் ஆகியவற்றை உணர்த்துவதே ஜாதகம்/ஜோதிடத்தின் பிரதான கொள்கை. நவகிரகங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன.
ஊழ்வினை பற்றி வள்ளுவரை குறிப்பிட்டுள்ளார். ஜோதிடத்தைப் பொறுத்த வரை சனிதான் ஊழ்வினைக் கோள். அது எந்தவீட்டில் இருக்கிறது, எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளது, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது என்பதைப் பொறுத்தே அந்த ஜாதகர் தன் வாழ்வில் கிடைக்கும் யோகங்களை தடையில்லாமல் அனுபவிப்பாரா? என்பதைக் கூற முடியும்.
ஊழ்வினைக் கோளை வைத்துதான் முற்பிறவி, தற்போதைய ஜென்மம், மறுஜென்மம் ஆகியவற்றைக் கணிக்க முடியும். ஒரு சிலர் 4 பங்களா வைத்திருந்தாலும், அதனை அனுபவிக்க முடியாமல் வாடகை வீட்டில் வசிப்பார்கள். இது ஊழ்வினைப் (முன் ஜென்மத்தில் செய்த பாவம்) பயன்.

பெரும்பாலான பெண்கள்/ஆண்களின் திருமணத்தில் பெரும் தடையாக செவ்வாய் தோஷம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோஷம் எப்படி ஏற்படுகிறது என்று நம்மில் பலருக்கு ஜோதிட ரீதியாக தெரிவதில்லை.
செவ்வாய் தோஷம் குறித்து ஒரு கூட்டத்தில் என்னைப் பேசும்படி அழைத்திருந்தார்கள். அதில் பேசிய நான், சகோதரத்துவத்திற்கும், பூமிக்காரகனாகவும் செவ்வாய் விளங்குகிறார். எனவே, முற்பிறவில் சகோதர/சகோதரிகளுக்கு துரோகம் செய்தவர்கள், அடுத்தவர் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும்.
மற்றவர்களின் உழைப்பில் (ரத்தம்) குளிர் காய்ந்தவர்களுக்கும் கடுமையான செவ்வாய் தோஷம் ஏற்படும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் 7, 8வது இடத்தில் செவ்வாய் அமர்வதால் திருமணம் தள்ளிப்போகும். இளமை முடியும் தருவாயில், காலம் கடந்த நிலையில் திருமணம் கைகூடும். இதுதான் செவ்வாய் தோஷம் என்று கூறினேன்.

எனவே, அடுத்த பிறவியில் செவ்வாய் தோஷம் ஏற்படக் கூடாது என்று விரும்புபவர்கள், இந்த ஜென்மத்தில் தன்னுடைய சகோதர/சகோதரிகளுக்கு தீமை செய்யாமல், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். முடிந்த வரை அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள்; இல்லாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள்; கெடுதல் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.
இந்தப் பிறவியில் நல்ல காரியங்களை செய்து, தியாகங்கள் மூலமாக அடுத்து வரும் பிறவி, அடுத்து வரும் சந்ததி ஆகியவற்றை சிறப்பாக உருவாக்க நம்மிடமும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில ஜாதகர்கள் நல்ல காரியம் செய்ய நினைத்தாலும், அவர்களுக்கு நடக்கும் மோசமான தசா புக்தி அதனைச் செய்ய விடாமல் தடுத்து விடுவதையும் பார்க்கிறோம். இதைத்தான் “அவன் சும்மா இருந்தாலும் அவன் சுழி சும்மா இருக்க விடாத” என்று பெரியவர்கள் கூறுவர்.


இதில் மேலும் படிக்கவும் :