யாருக்காவது மரணத்தைக் கணித்துக் கொடுத்த அனுபவம் உங்களுக்கு உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia| Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2009 (13:50 IST)
என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த நிறைய பேருக்கு மரணத்தை கணித்துக் கொடுத்தது உண்டு. ஆனால் அதனை நேரடியாக யாரிடமும் கூறியதில்லை. மாறாக சூசகமாகவே எப்போதும் அதனைத் தெரிவிப்பேன்.

உதாரணமாக, உயில் எழுத வேண்டியிருந்தால் அதனை செய்து முடித்து விடுங்கள் அல்லது வாரிசுகளுக்குள் ஏதாவது சொத்துத் தகராறு இருந்தால் அதனை உடனடியாக சுமுகமாக தீர்த்து விடுங்கள் என்று கூறுவேன்.

கடந்த மாதம் என்னிடம் வந்திருந்த ஒரு பிராமணத் தம்பதியரிடம் கூட, கணவரின் மரணத்தைப் பற்றி சூசகமாகத் தெரிவித்தேன். அந்த தம்பதியருக்கு 3 மகன், ஒரு மகள். இதில் 2 மகன்கள் ஆஸ்ட்ரேலியாவிலும், கடைசி மகன் நியூஜெர்ஸியிலும் வசிக்கின்றனர். மகள் கும்பகோணத்தில் வசிக்கிறார். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.
கணவரின் ஜாதகத்தைப் பார்த்த பின்னர் அந்தத் தம்பதியரிடம் கேட்டேன், “வாரிசுகளுக்கு சொத்து எல்லாம் பிரித்துக் கொடுத்தாகி விட்டதா?” என்று. அதற்கு அவர், “இப்போது என்ன அவசரம். எல்லாம் நலமாக இருக்கிறதே?” என்று பதிலளித்தார்.

அதன் பின்னர் அவரது மனைவியிடம் பேசிய நான், கணவரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றேன். ஏன் அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா? என்று என்னிடம் அவர் கேட்டார். அதற்கு, ஒரு கண்டம் இருப்பதால் உங்கள் கணவர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என பதில் கூறி அனுப்பி வைத்தேன்.
ஒரு 3 மாதத்திற்குப் பின்னர் மீண்டும் என்னைப் பார்க்க அந்த மாமி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், “நீங்கள் எச்சரித்த போதே நாங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாம் கைமீறிப் போய்விட்டத” என்று கூறி கண்கலங்கினார்.

இதேபோல் கடந்த 1993இல் வெங்கட்நாராயணா சாலையில் எனது அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்த போது, பிரபல சினிமா இதழைச் சேர்ந்த செய்தியாளர் தனக்கு திருமணம் நிச்சயம் செய்ய உள்ளதாகவும், அதற்கு இது ஏற்ற நேரமா? என்றும் என்னிடம் கேட்டார்.
சோழி உருட்டிப் பிரசன்னம் பார்த்ததில், சகுனம் அவ்வளவு சரியாக இல்லை எனத் தெரிந்தது. இதனால் திருமண நிச்சய நிகழ்ச்சியை தள்ளிப் போடுங்கள் அல்லது நேரடியாக திருமணத்தை வைத்துக் கொள்ளுங்கள் (அதாவது திருமணம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாள் நிச்சயம் செய்து கொள்வது) என்றும், சொந்த ஊருக்கு தற்போது செல்ல வேண்டாம் என்றும் கூறினேன்.
அதற்கு அவர், நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து செய்து விட்ட காரணத்தால் தம்மால் சொந்த ஊருக்கு செல்லாமல் இருக்க முடியாது என்று கூறிவிட்டு புறப்பட்டார். ஓரிரு நாட்களுக்குப் பின்னர் டிராவல்ஸ் பேருந்தில் திருநெல்வேலி சென்ற அவர், அங்கிருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக மாற்றுப் பேருந்து பிடிக்க முயன்ற சமயத்தில் மற்றொரு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று எனக்கு தகவல் வந்தது.
இதுபோல் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்டவர்களை மறைமுகமாக எச்சரித்துள்ளேன். அதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வதும், அலட்சியமாகக் கருதுவதும் சம்பந்தப்பட்டவரின் மனநிலையைப் பொறுத்தது.


இதில் மேலும் படிக்கவும் :