பெயரின் முதல் எழுத்தாக தாயின் பெயர்

Webdunia|
தமிழ்.வெப்துனியா.காம்: பெயரின் முன்பு சிலர் தாயின் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்துக்கொள்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரும் அப்படித்தான் முதலில் அப்பா பெயர், பிறகு அம்மா பெயர் என்று சேர்த்துக் கொண்டிருக்கிறார். கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட, முதலில் தாய் பெயரைச் சேர்த்து, தந்தை பெயரையும் சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள். இது பாரம்பரியம்படி பார்க்கப் போனால் சரியாகத்தான் இருக்கிறது. இப்படி செய்யலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: மாதுர் காரகன் செவ்வாய், பிதுர் காரகன் சூரியன். ஒருவருடைய ஜாதகத்தில் 4ஆம் இடம்தான் தாயினுடைய இடம். அந்த 4ஆம் இடம்தான் நடத்தைக்குரிய இடம். இந்த 4ஆம் இடம்தான் சுகஸ்தானம், சுகபோகம் என்று சொல்லக்கூடியது. அதனால்தான் ஒருவன் தாயைக் இழக்கிறான் என்றால் அவன் அனைத்தையும் இழக்கிறான் என்று சொல்வார்கள். தந்தையை ஒருவன் இழக்கிறான் என்றால் அறிவை இழக்கிறான், தாரத்தை இழக்கிறான் என்றால் சில சுகங்களை இழக்கிறான், தாயை இழக்கிறான் என்றால் அனைத்தையும் இழக்கிறான் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
அதனால் 4ஆம் இடத்தில் நல்ல கிரகம் இருக்க வேண்டும். அந்த 4ஆம் இடத்திற்குரிய கிரகமும் நன்றாக இருக்க வேண்டும். அதனால்தான் தாயைப் போல் பிள்ளை, தாயினுடைய நடத்தை என்றெல்லாம் சொல்வது, ஒப்பிட்டு ஒப்பிட்டுச் சொல்வது. அதாவது தாயைத் தண்ணீர்க் கரையில் பார்த்தால் பிள்ளையை வீட்டில் சென்று பார்க்க வேண்டாம். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்று சொல்வதெல்லாம் 4ஆம் இடத்தைக் குறிப்பிடுவதுதான். இந்த 4ஆம் இடம்தான் குணம், சுகம் எல்லாம். அதனால், தாய்ஸ்தானம் நன்றாக இருந்துவிட்டு, தாய்க்குரிய கிரகமும் நன்றாக இருந்துவிட்டால் தாராளமாக தாய்க்குரிய பெயரின் முதல் எழுத்தையும் பெயருக்கு முன்பாக சேர்த்து அருமையாக முன்னேற முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :