வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 3

- பட்டுக்கோட்டை பிரபாகர்

மூன்று!

நம் வாழ்வின் நோக்கம் பெரும்பாலும் வளர்ச்சி என்பதாகத்தான் இருக்கிறது. பொருளாதார ரீதியாக வளர்தலே முன்னேற்றம் அல்லது வளர்ச்சி என்பது பலரின் கருத்து!
WD

"சின்னதா ஒரு தொழில் ஆரம்பிச்சாம்ப்பா. ரெண்டே வருஷத்துல கார் வாங்கிட்டான், வீடு கட்டிட்டான்... சரியான வளர்ச்சி!" என்று பேசுகிறோம். அதேபோல பதவி அல்லது புகழில் காணும் முன்னேற்றத்தையும் வளர்ச்சி என்கிறோம். "சாதாரண கிளார்க்கா இருந்தான். இப்போ மளமளன்னு முன்னேறி, மேனேஜர் ஆகிட்டான்" என்றும் பேசுகிறோம்.

இந்தப் பணம், பதவி, புகழ் இதெல்லாம் வளரத்தான் வேண்டும். அப்போதுதான் சரியான வகையில் நம் உழைப்பு நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இதெல்லாம் நம் சமூக வாழ்வில் தேவையான, நியாயமான வளர்ச்சி. அதேசமயம் நம் உள்வளர்ச்சி பற்றி சற்று யோசிப்போம். நிம்மதி, மகிழ்ச்சி, பக்குவம், சிந்தனை என எல்லாவற்றிலும் வளர்ச்சி வேண்டுமல்லவா?

சொல்லப் போனால் இந்த உள்நிலை வளர்ச்சிதான் மிக முக்கியமான, அவசியமான, உபயோகமான, உண்மையான வளர்ச்சி!

‘‘நாலு கார் இருக்கு சார். பேங்க்ல நிறையப் பணம் இருக்குங்க. ஆனா, என்ன செய்ய? பத்து வருஷம் முன்னாடி வாடகை வீட்டுல இருந்தேன், சைக்கிள்லதான் போய்க்கிட்டிருந்தேன். அப்ப இருந்த நிம்மதி இப்ப இல்லியே சார்’’ என்கிறார் ஒரு நண்பர். பணம் அதிகமாகும்போது, வாழ்வின் சௌகரியங்கள் அதிகரிக்கின்றன. அதே போல, நிம்மதியும் கூடவே வளர வேண்டுமே. அங்கே பலருக்கு பெருமூச்சு ஏன் வருகிறது? எங்கே கோளாறு?

நூறு கோடிக்கு அதிபர் குளிர்சாதனம் பொருத்திய அறையில் மெத்தையில் உருண்டு கொண்டு உறக்கம் வராமல் அதற்கு மாத்திரை சாப்பிடும்போது... பிளாட்ஃபாரத்தில் ஒரு கூலித் தொழிலாளியால் நிம்மதியாக எப்படி உறங்க முடிகிறது?

ஆக... நிம்மதியும், திருப்தியும், மகிழ்ச்சியும், பணத்திலோ அல்லது அது கொண்டுவரும் பொருள்களிலோ இல்லை. மனநிலையை விடுங்கள். நம் உடல்நிலையிலும் நிம்மதியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அணியில் தான் பலரும் இருக்கிறோம்.

கையில் பொருளில்லாததால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றால், புரியும். ஆனால், நன்றாகச் சாப்பிட முடியும் என்கிற வசதியான நிலையிலும் சரியாகச் சாப்பிட இயலாத உடல்நிலை நமக்கு இருக்குமானால், அது நாமே ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு நிலை அல்லவா?

நமது உடல் அமைப்பில் பிறப்பிலேயே இருக்கும் குறைபாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான உடல் பிரச்னைகள் நாமே தேடிக்கொள்வதுதானே? நம் உடலின் அலங்காரத்துக்கு நாம் காட்டுகிற அக்கறையை, அதைச் சரியாகப் பராமரிப்பதில் காட்டுகிறோமா? சரியான உணவுப் பழக்க வழக்கங்களை நாம் கொண்டிருக்கிறோமா? அதைப் பற்றிய விழிப்பு உணர்வு நம்மில் எவ்வளவு பேருக்கு இருக்கிறது?

அழகானதொரு ஓவியத்தை முழுவதும் மறைத்தபடி புழுதி படிந்திருந்தால்... ஓவியத்தின் சிறப்பை யாரால் உணர முடியும்? யாரால் ரசிக்க முடியும்? அப்படித்தானே நம் உடலை நாம் அலட்சியமாகப் பராமரிக்கிறோம்?

ஒருவர் அழகான மலரை உங்களுக்குத் தருகிறார். அதைக் கசக்கி வீசினால், கொடுத்தவரின் மனம் எப்படி நொந்துபோகும்? அப்படி ஒரு அழகான மலராக இந்த உடலை நமக்குத் தந்திருப்பது இந்த இயற்கை அல்லது இறைவன். நம் உடலின் தேவை என்ன? கட்டமைப்பு என்ன? எப்போது எதைச் சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கு தகவலறிவும் இல்லை.

நமது உடலைப் பற்றியும் உணவுப் பழக்கம் பற்றியும் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த உடலுக்குள் ஒரு பாகமாகத்தான் நமது மனம் இருக்கிறது. நமது உடல்நிலைக்கும் மனநிலைக்கும் நிறைய, நேரடியான தொடர்பு இருக்கிறது.

யோகா என்பது மனதுக்கு மட்டுமோ அல்லது உடலுக்கு மட்டுமோ அல்ல. மனம், உடல் இரண்டும் கொண்ட மனிதனுக்கு, அதுவும் வறுமையை வென்ற, அடுத்த நிலைக்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குமானது.

வாழ்க்கை பற்றிய தெளிவான புரிதலை ஒரு நாளிலேயே தெரிந்து கொள்ளவும் இயலும், ஒரு ஜென்மம் முழுதுமான முயற்சிகளுக்குப் பின்னும் புரிதல் கிடைக்காமலும் போகலாம். இது அவரவர் மனத் தீவிரமும், ஆர்வமும், விருப்பமும் சம்பந்தப்பட்டது.

ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டு ஒரு ஞானியிடம் வருபவர்களை மூன்று வகைகளில் பிரிக்கலாம்.

1. மாணவர், 2. சீடர், 3. பக்தர்

இதில் மாணவர் என்பவர் கற்றுக்கொள்வதில் விருப்பம் உள்ளவர். தனக்குள் உண்மையில் மாற்றங்களைத் தேடுவதைவிடவும்... தனக்கு சௌகரியமானதை மட்டும் கற்க விரும்புவார் இவர். எது உடல்ரீதியான நல்வாழ்வை வழங்குமோ அதை அல்லது எது அவருக்கு மன அமைதியை அளித்து பொருள்தன்மையிலான நல்வாழ்வை அளிக்குமோ அதை மட்டுமே கற்க விரும்புவார்.

ஆனால் சீடர் அப்படியில்லை. அவர் தனக்குள் ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்புவார். பக்தரோ, தனக்கென எந்த விருப்பமும் இல்லாமல் தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்க விரும்புவார்.

ஆன்மீகத் தேடலில் மாணவர்களாக வருபவர்கள் கடைசி வரை மாணவர்களாகவே இருப்பதும் உண்டு. சிலர் சீடர்களாக மாறுவதும் உண்டு. இன்னும் சிலர் பக்தர்களாகவும் மாறுகிறார்கள்.

ஆனால்... தியானலிங்கத்தின் முன்னால் இருக்கும்போது, ஒருவர் நேரடியாக பக்தராகவே தம் தேடலைத் துவங்குவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆகவேதான் தியானலிங்கத்தை ஒரு ஆன்மீகக் குருவாகவும் அருள் தரும் ஆசானாகவும் கருத முடிகிறது.