1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

ஈஷாவும் நானும் - இசைக்கலைஞர் சுதா ரகுநாதன்

பல லட்சம் பேரின் வாழ்வை ஈஷா மலரச் செய்துள்ளது. இந்தக் கணத்தில் கூட எங்கோ மூலையில், யாரோ ஒருவர் ஈஷாவுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம். கர்நாடக இசைப் பாடகி திருமதி.சுதா ரகுநாதன் அவர்களின் பகிர்தல்கள் உங்களுக்காக...
FILE

திருமதி. சுதா ரகுநாதன்:

ஒருவருடைய வாழ்வில் ஈஷா எப்படிப்பட்ட ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நான் உணர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘வாழ்க்கை ஓர் ஒலிம்பிக்ஸ் போட்டி’ என்பார் பித்தாகரஸ்.

சரிதான்… எப்படியாவது பரிசைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்று கடுமையாகப் போராடுபவர்கள் ஒருபக்கமும் அதில் எந்த வகையிலும் கலந்துகொள்ளாமல் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பவர்கள் மறுபக்கமுமாக இருப்பதுபோல், இன்று நாம் எல்லோரும் ஏதாவது ஒரு வகையில் சத்குருவின் பார்வையாளர்களாக இருக்கிறோம்.

சத்குரு என்ன செய்யப் போகிறார், எதைக் கற்றுத்தரவிருக்கிறார், யாருடைய திருப்பிறப்பு இவர் என்று தெரிந்துகொள்ள பல்லாயிரம் பேர் வருகிறார்கள். உங்களின் அறிவுரையைக் கேட்க, தினம் தினம் காத்திருக்கிறார்கள். அப்படித்தான் நானும்.

என் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் வாழ்வை இன்னும் எளிதாக்கவும் உங்களை நோக்கி வந்தேன் சத்குரு.

1999ம் வருடம் நவம்பர் மாதம் 23ம் தேதி தியானலிங்கத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விவரிக்க முடியாத வியப்பு அது. சொல்ல முடியாத அனுபவமாக இருந்தது. அன்று எனக்குள் என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. தியானலிங்கத்தை உலகுக்குக் கொண்டுவந்த அன்று எனக்கு அதன் முன் பாடும் வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்வின் பாக்கியம். அது எனக்குள் நிகழ்த்திய அதிர்வுகள், என்னை எனக்கே புதிதாக அறிமுகப்படுத்தியது போன்ற ஓர் அனுபவம்.

அதன் பிறகே, நான் யோகம், தியானம் இரண்டும் பயில விருப்பம் கொண்டு இணைந்தேன். ஒரு நாள் என் நண்பர் ஒருவர், ‘என்ன சுதா, நீயும் ஈஷா ஃபேஷனில் மூழ்கிவிட்டாயா?’ என்று கேலியாகக் கேட்டார். ‘பேசுவதை உணர்ந்து பேசுங்கள். ஈஷா எனக்கு ஃபேஷன் (fashion) இல்லை… அது என் பேஷன் (passion). நான் உணர்வு‌ப்பூர்வமாக ஈடுபட்டுள்ள விஷயம். உடலையும் மனதையும் சுருதி சேர்த்து, என்னை நானே ஓர் இசைக்கருவி போல உணர்ந்த இடம். வாழ்வின் நோக்கத்தை, அர்த்தத்தை, அதன் அழகை உணரச்செய்த இயக்கம்' என்றேன். நண்பருக்கு ஈஷாவைப் பற்றி தெளிவாகப் புரிந்திருக்கும்.

‘அமைதியான, ஆனந்தமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே முக்கியம்!’ என்கிறார் சத்குரு. அப்படிப்பட்ட ஒரு சூழல் அனைவருக்கும் வாய்க்க வேண்டுமென்பதே, ஈஷாவின் நோக்கமாக, பாதையாக, பயணமாக இருக்கிறது. அந்த மிகப் பெரிய ஓட்டத்தில் ஒரு சின்ன அடியைத்தான் இதுவரை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். பிரமாதமான, பிரமாண்டமான வேலைகளை நோக்கியே ஈஷா ஒவ்வொரு நாளும் இயங்குகிறது. இந்தப் புனிதப் பயணத்தில் நானும் ஓர் அங்கம் என்பதில் எனக்குத் தனிப் பெருமிதம்.

கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள 4000 கிராமங்களை ஈஷா சென்றடைந்திருக்கிறது. அங்குள்ள மக்களுக்கான அடிப்படைச் சுகாதாரம், ஆரம்பக் கல்வி, வேலைவாய்ப்பு எனப் பல பரிமாணங்களில் அவர்களின் வாழ்வை மலரவைக்க விரும்புகிறது ஈஷா.

முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களால் இயங்குகிற அமைப்பு என்பதே இதன் சிறப்பு. உலகம் முழுவதிலும் விருப்பத்துடன் தங்கள் நேரம், உழைப்பு, பங்களிப்பு என இயங்குகிற லட்சக்கணக்கான தொண்டர்கள் மட்டுமே போதாது என்று நினைக்கிறேன். ஈஷாவின் இந்தச் சமூக நலத் திட்டங்களுக்காக, நாம் ஒவ்வொருவரும் ஒரு சின்ன உறுதி மொழியாவது எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும்.

ஈஷாவால் நான் அடைந்த நற்பயன்களை நான் நன்றியுடன் ஒவ்வோர் கணமும் நினைத்துப் பார்க்கிறேன். நண்பர்களிடம் பேசுகிறேன். ஈஷாவின் செயல்திட்டங்களில் என்னாலான பங்களிப்பைச் செய்ய ஒவ்வொரு முறையும் விரும்புகிறேன்.

என் எல்லா நாட்களும் ஈஷா இல்லாமல் இப்போது விடிவதுமில்லை… முடிவதுமில்லை!