அம்பிகையைச் சரண் புகுவோம் - பகுதி 1

Navratri
Annakannan| Last Modified வியாழன், 2 அக்டோபர் 2014 (12:53 IST)
பராசக்தி வழிபாடு என்பது நம் தமிழ் மண்ணில் வேரூன்றிய ஒன்று. சக்தி என்பவள் எல்லாவற்றையும் கடந்த மகா சக்தியாக, பராசக்தியாகப் போற்றப்படுகிறாள். அவளே அமைதி, பக்தி, ஞானம், பசி, தாகம், பொறுமை, நிழல், ஒளி, இரக்கம், மகிழ்ச்சி, பயம் என அனைத்து மனித உணர்வுகளிலும் விரவி நிற்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாப் படைப்புகளுக்கும் அன்புத் தாயாக அரவணைத்து நின்று அழிவுகளிலிருந்தும் நம்மைக் காக்கிறாள்.
 
இந்தச் சக்தி என்பவள் யார்? அவள் பார்வதியா, லட்சுமியா? சரஸ்வதியா? அல்லது துர்க்கையா? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது இங்கே அவசியமாகிறது. பராசக்தி இவர்களுக்கெல்லாம் மேலானவள். பராசக்திதான் மேற்சொன்ன தேவியரையும் படைத்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
 
 
பராசக்தியின் அவதாரம் :
 
இந்த பராசக்தியின் அவதாரம் எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம். ஒரு சமயம் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பெரும் பகை மூண்டது. அசுரர்கள் தங்களை மிகவும் கொடுமைப்படுத்துவதாகத் தேவர்கள், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் முறையிட்டனர். இக் கடவுளர்களின் கோபம் பெரிய ஒளி வடிவமாக உருவெடுத்தது. இப்பிரபஞ்சம் முழுவதுமாக வியாபித்த அந்த ஒளி ஓர் அழகிய ஒளி பொருந்திய பெண்ணாக உருவெடுத்தது. 
 
சிவன் தனது திரிசூலத்திலிருந்து மற்றொரு திரிசூலத்தையும், மஹாவிஷ்ணு தனது சக்ராயுதத்திலிருந்து ஒரு சக்கரத்தையும், தேவர்களும் தம் பங்கிற்குப் பல ஆயுதங்களையும் தேவிக்கு அளித்தனர். சர்வாலங்கார பூஷிதையாக தேவி பராசத்தி, தன் ஆயுதங்களுடன் அசுரர்களை வீழ்த்தப் புறப்பட்டாள். அசுரர்களைத் தன் சக்தியால் அழித்து அமைதியை நிலை நாட்டினாள். 
 
சாரதா நவராத்திரி
 
இதன் மூலமாக நாம் துர்க்கையின் அவதாரத்தைப் பற்றியும் அறிய முடிகிறது. பராசக்தியே துர்க்கையாக அவதாரம் எடுத்து மஹிஷாசுரன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்தாள். துர்க்கையின் இந்த வெற்றியைத்தான் நாம் தமிழ்நாட்டில் நவராத்திரி என்ற பெயரில் ஒன்பது நாட்கள் விழாவாகக் கொண்டாடுகிறோம். 
 
புரட்டாசி மாதம் வரும் இந்த சாரதா நவராத்திரி மஹாளய அமாவாசைக்குப் பிறகு முதல்நாள் தொடங்கி விஜயதசமி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 
 
வீடுகளில் பொம்மைக் கொலு வைத்து, சுமங்கலிகளையும், பெண் குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பிகையாகப் பாவித்து மஞ்சள், குங்குமத்துடன் தாம்பூலம் தந்து உபசரித்து அம்பாளை ஆராதிக்கிறோம். 
 
பல கோயில்களிலும் நவராத்திரி மண்டபம் அமைத்து அம்பிகை கொலு வீற்றிருக்கும் காட்சிகள் சித்தரிக்கப்படுவது கண்கொள்ளாக் காட்சி. வருடத்தின் மூன்று வெவ்வேறு பருவங்களில் நவராத்திரி விழாக்கள் வந்தாலும் இந்தச் சாரதா நவராத்திரி அவற்றில் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 
 
ஒன்பதாம் நாளில் கலைமகளைக் கொண்டாடும் சரஸ்வதி பூஜையும், பத்தாவது நாளான விஜயதசமி அம்பிகை மஹிஷாசரனைக் கொன்ற வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. தீயவை ஒடுக்கப்பட்டு நல்லவையே வெற்றி பெறும் என்பதையே இந்தத் திருநாள் உணர்த்துகிறது.
 
துர்க்கையின் அம்சங்களான பிராஹ்மி, மஹேச்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, நரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டா மற்றும் சிவதுர்கா என்ற பெயர்களில் பராசத்திக்குப் பல்வேறு ஊர்களில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.
 
தமிழ்நாட்டில் சக்தி வழிபாடு
 
பராசக்தியின் தத்துவம், தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள ஒன்றாகும். அம்பிகையைத் தாயாகப் போற்றி வணங்குவது இங்கு என்றென்றும் உண்டு. சக்தியைச் சிவனுக்கு இணையாகப் போற்றுவதே இங்கு மரபு. ``சக்தியில்லையேல் சிவம் இல்லை‘‘ என்று கேட்டிருக்கிறோமல்லவா? 
 
காஞ்சியிலே காமாக்ஷியாக, குமரியிலே கன்னியா குமரியாக, மதுரையிலே மீனாக்ஷியாக, திருநெல்வேலியிலே காந்திமதியாக, திருக்கடவூரில் அபிராமியாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். சென்னையில் மட்டும் மயிலையிலே கற்பகமாக, திருவேற்காட்டில் கருமாரியாக, மாங்காட்டில் காமாக்ஷியாக, வடசென்னையில் காளிகாம்பாளாக அன்னை கோயில் கொண்டிருக்கிறாள்.
 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பங்காரு அடிகாளார் வடிவமைத்த, சுயம்புவாக அமைந்த அம்மனைத் தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். அன்னையிடம் சரணடைவது மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக வாழ்ந்து வரும் பலரை இங்கு காணலாம்.
 
பராசத்தியின் மற்றொரு அம்சமாகக் கருதப்படும் மாரியம்மன் கோயில்கள், இல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். கிராமங்களைக் காக்கும் காவல் தெய்வமாகப் போற்றப்படும் மாரியம்மன் வேப்பிலை மாலையுடன், எலுமிச்சை, மாலையும் அணிந்து கண்கண்ட தெய்வமாய் விளங்கி பக்தர்களுக்குக் கருணை காட்டுபவளாய்த் திகழ்கிறாள்.
 


இதில் மேலும் படிக்கவும் :