மைசூர் தசரா

Webdunia|
மைசூர் தசரா வழக்கம் போல இந்த ஆண்டும் கோலாகலமாகத் தொடங்கி விட்டது. அரசர்கள் ஆட்சியில் தசரா எனப்படும் நவராத்திரி விழா இந்திர விழா போல மிகச் சிறப்பாக நடைபெறும். இப்போதும் ஒன்றும் அதிகம் பொலிவிழக்காத விழா மைசூரின் தசரா விழா. கர்னாடகக் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பெருவிழா இது.

தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது "ஜம்புசவாரி" எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும். நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். சென்ற செவ்வாய்க்கிழமை "ஸ்ரீராமா" என்ற யானையின் தலைமையில் அபிமன்யூ, ரேவதி, ஹரீஷ், ப்ரஷாந்த் என்கின்ற மற்ற யானைகள் தசராவிற்கு ஒரு வாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்து நின்றன.
தங்க முகப்படாம

பலராமா எனப்படும் மூத்த யானைக்கு தங்க முகப்படாம் அணிவிக்கப்படும். இதனால் யானை மற்றவர்கள் பார்வையைக் கவர்ந்தாலும் படும்அவஸ்தையை அந்த யானை தான் உணரும். தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா? அது போலத் தான். 900 கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்துவதை மிகச் சிலரே உணர முடியும்.
இதே அவஸ்தை தான் மற்ற யானைகளுக்கும். மைசூர் நகரத்தின் சந்தடித் தெருக்களில் ஆறு கிலோ மீட்டர் நெரிசல்களினிடையே அவை பாகனின் கட்டளைக்கு பயந்து நடக்கும். தசரா வைபவத்தை ஒட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின் போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது.
யானைகள் பரிதாபக் காட்சி

காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்து பழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச் சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது வேதனை. தினமும் 900 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை பயிற்சிக்குச் செல்ல வேண்டும். தினமும் சூரிய வெப்பத்தின் கீழ் பாகனின் அங்குசத்திற்கு அடி பணிந்து அவஸ்தைகளை அழுத்திக் கொண்டு யானை நிற்பது பரிதாபக் காட்சி.
அணிவகுப்பின் போது யானைகள் கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும். அவைகளின் உடல் அழுத்தம் நீங்க அவ்வப்போது ரம் ஒப்பியம் அளிக்கிறார்கள் இது உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என அறியாமல். அணிவகுப்பிற்கென்றே அவைகளுக்கு செயற்கையாய் அலங்காரங்கள் செய்யப்பட அதற்கு 10லிருந்து 12 மணி நேர விரயம். இதற்கு சம்மதிக்காத யானைகள் பாகனின் அங்குச மிரட்டலில் அடிபணிகின்றன. யானைமுடி ஆபரணத்தில் சேர்த்து அணிந்தால் நல்லதென அதன் அவஸ்தையைப் பொருட்படுத்தாது அதன் வாலிலிருந்து பிடுங்கப்படுகிறது.


வனவாழ்வு நலப்பாதுகாப்பு அமைப்ப

வனவாழ்வு நலப்பாதுகாப்பு அமைப்பு தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுபர்ணா கங்குலி சொல்கிறார் "வனவிலங்கு நல்வாழ் உரிமைச் சட்டப்படி எந்த யானைக்கும் 400 கிலோ எடைக்கு மேல் பாரம் சுமக்க அனுமதி இல்லை. காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள் இந்தியா முழுவதும் மொத்தமாக 3000 வரை இருக்கலாம், கோயில் யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கான் க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்க வைக்கப் படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது. அரசு தான் இதைக் கருத்தில் கொண்டு கவனிக்கவேண்டும்" என்கிறார். தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை வைத்தாயிற்று.
1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

2. யானைகளுக்கு சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. 20 அல்லது 30 கிலோ எடைக்கு மேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக் கூடாது.
4. யானைகளின் மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும்.


காப்பாற்றுமா அரசு?

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின் சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும் தான். அன்று ‘ஆதிமூலமே‘ என்று கஜேந்திரன் என்னும் யானை கத்தியதும் ஆண்டவன் ஓடி வந்து காப்பாற்றினார்; இன்று அரசு அதைச் செய்யுமா?
இதோ இன்னும் சில நாட்களில் மைசூரில் தசரா திருவிழா ஆரம்பம். ‘மைசூரு தசரா எஷ்டந்து சுந்தரா?‘ (மைசூரின் தசரா எத்தனை அழகு?) என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது. பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகி விட்டன!


இதில் மேலும் படிக்கவும் :