ஹிக்ஸ் போஸான்: கடவுள் துகளா அல்லது கடவுள் சபித்த துகளா?

Webdunia| Last Modified திங்கள், 10 செப்டம்பர் 2012 (20:37 IST)
கேள்வி: சத்குரு, ஹிக்ஸ் போஸான் என்று ஒரு புதிய அணுத் துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் கடவுள் இருப்பது நிரூபிக்கப்படுமா? அறிவியல் மூலம் அது விளக்கப்படுமா?

சத்குரு: கடவுள் துகள் (god particle) என்று அதற்கு பெயர் வைத்தது நல்லதாய் போயிற்று. ஏனென்றால் யாரோ ஒருவர் அதற்கு கடவுள் சபித்த துகள் (god damn particle) என்று பெயரிட வேண்டும் என்று நினைத்தார்கள்.

உலகம் முழுவதிலும், பௌதிகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கூட, இப்பொழுது அணுத்துகள் பௌதிகம் (particle physics) பற்றி பேசுவதே மிகப் பெரிய சாதனைதான். தற்சமயம் போஸானால் தொழில்நுட்ப ரீதியாக உபயோகம் இல்லாவிட்டாலும் அதனை அறிந்து கொள்வதற்காக மட்டுமே பத்து பில்லியன் டாலர் செலவழிக்கப் போகிறார்கள்.
அறிவியல் ரீதியாக இதன் விளக்கம் என்ன? யோகாவில் படைப்பனைத்தையும் ஸ்தூலம், சூட்சுமம், சூனியம், சிவம் என்று பகுத்துள்ளார்கள். ஸ்தூலம் என்றால் பொருள்தன்மையில் இருப்பது. நீங்கள் பார்ப்பவை, கேட்பவை மற்றும் ஐம்புலன்களால் உணரக்கூடிய அனைத்தும் ஸ்தூலமாகக் கருதப்படுகிறது. அவற்றை உங்கள் அறிவுத்திறனால் புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்ள முடியும். ஒரு பொருளின் அடிப்படைக் கட்டுமானப்பொருள் அணு. தேவையான அணுக்கள் சேர்ந்தால் நம் கண்ணுக்கு அது புலப்படுகிறது.
சூட்சுமம் என்பது நம் கண்ணுக்கும் மற்ற புலங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கும், ஆனாலும் அதுகூட பொருள்தன்மை கொண்டதுதான். சூட்சும நிலைக்கு வந்துவிட்டால், அப்பொருளை உங்கள் புத்தியால் ஆராய்ந்து அறிய முடியாது. அதற்கு அசாதாரணமான அறிவுத்திறன் அதாவது, விசேஷ ஞானம் தேவைப்படும்.

இந்த விசேஷ ஞானம்தான் விஞ்ஞானம் எனப்படும். ஐம்புலங்களால் கூட உணர முடியாதவற்றை உங்களால் உணர முடிந்தால் அதுவே விஞ்ஞானம். ஹிக்ஸ் போஸானை யாருமே பார்த்த்தும் இல்லை, பார்க்கவும் முடியாது - அதன் கால்தடம் மட்டுமே பார்க்கமுடியும். கால்தடத்தைப் பார்த்து தான் ஹிக்ஸ் போஸான் இருப்பதாக நம்புகிறார்கள். காட்டில் புலியின் கால்தடத்தைப் பார்த்து புலி நடமாட்டம் இருப்பதாக நம்புகிறோம் அல்லவா, அதுபோலத்தான்.
இன்னும் மேற்கொண்டு சென்றால் சூன்யம் ஆகிவிடும். சூன்யம் என்றால் முழு வெறுமை என்று அர்த்தம். சூன்யத்தில் உங்கள் அறிவுத்திறன், ஐம்புலங்கள் எல்லாமே பயனற்று போய்விடும். ஏனென்றால் அங்கே பொருள், உருவம் எதுவும் இல்லை. சூன்யத்திற்கும் அப்பாற்பட்டது சிவம். எது இல்லையோ அதுவே சிவம். அது உருவமாக இல்லை. இதனை உங்கள் தர்க்க மனம் கொண்டு உணரவும் முடியாது.
இன்று நவீன அறிவியல் பிரபஞ்சம் முழுவதையும் தர்க்க மனம் கொண்டு புரிந்து கொள்ளமுடியுமஎன்று நம்புகிறது. உங்கள் அறிவு வேண்டுமானால் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கலாம்; ஆனால் பிரபஞ்சம் உங்கள் அறிவுக்குள் அடங்கிவிடாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தை தாண்டியவுடனேயே உங்கள் தர்க்க அறிவு பயனற்றுப் போகிறது.
பிரபஞ்சம் பற்றி யோகக் கலாச்சாரத்தில் இப்படியெல்லாம் விவரித்து இருக்கிறார்கள் என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒருவரிடம் விளக்கினேன். பிரபஞ்சம் குறித்த விஷயங்கள் யோகக் கலாச்சாரத்தில் கதைகளாக சொல்லப்படுகின்றன. அவற்றை எல்லாம் ஒருவர் தன் அனுபவத்தின் மூலம் நிதர்சனமாய் அறிந்தால் மட்டுமே நம்பவேண்டும். அதுவரை எதையும் அப்படியே நம்பக்கூடாது என்றும் இக்கலாச்சாரத்தில் சொல்வார்கள் என்று சொன்னேன்.
மேலும் என் அனுபவத்தில் இது தான் பிரபஞ்சம் குறித்த நிதர்சனம் என்று என் அனுபவத்தைச் சொன்னேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அவர்கள், “சத்குரு, நீங்கள் சொன்ன விஷயத்திற்கு, கூடவே கணிதம் மூலம் ஆதாரம் காண்பித்தால், நோபல் பரிசே கிடைத்து விடும்,” என்றார்கள்


இதில் மேலும் படிக்கவும் :