மஹாசிவராத்திரி இருளை சுவைத்திடுங்கள்!

Webdunia|
FILE
மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சிவராத்திரிதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை மஹாசிவராத்திரி என்கிறோம். சிவராத்திரியைக் கொண்டாடுவதும் அல்லது மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதும், இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. காரண அறிவின் அடிப்படையில் இயங்கும் எந்த ஒரு மனமும் இருளை எதிர்க்கும். சிந்திக்கின்ற மனங்கள் இயல்பாகவே ஒளியைத்தான் தேர்ந்தெடுக்குமே தவிர இருளை தேர்ந்தெடுக்காது. ஆனால் இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் ‘எது இல்லையோ அது’ என்பதுதான். எது ‘இருக்கிறதோ’ அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது ‘இல்லையோ’ அது சிவன்.

நீங்கள் கண்ணைத் திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, உங்களுடைய பார்வையின் நோக்கம் சிறியதாக இருந்தால், படைப்பின் பல அம்சங்களை நிறையவே பார்ப்பீர்கள். உங்கள் பார்வையின் நோக்கம் உண்மையில் பெரிய விஷயங்களை எதிர்பார்த்து இருந்தால், இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய இருப்பான, பரந்து விரிந்த வெறுமையைப் பார்ப்பீர்கள். வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் (Galaxies) அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை அனைவருடைய கவனத்துக்கும் வருவதில்லை. இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளாகவே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்த பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, ‘மஹாதேவா’ என்று குறிப்பிடுகிறோம்.
இந்த உலகிலிருக்கும் ஒவ்வொரு மதமும், கலாச்சாரமும், எப்போதுமே எங்கும் நிறைந்த ஒரு தன்மையை, எங்கும் பரவியிருக்கும் தெய்வீகத்தின் தன்மையைப் பற்றி பேசியிருக்கின்றன. இதைப் பார்க்கும்போது, எங்கும் பரவியிருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருள் அல்லது ஒன்றுமின்மை அல்லது வெறுமை மட்டும்தான். பொதுவாக மக்கள் நல்வாழ்வை வேண்டும்போது, தெய்வீகத்தை ஒரு ஒளியாகவே பாவிக்கிறார்கள். ஆனால் தங்களது நல்வாழ்வை நாடாமல், அதையும் கடந்து செல்ல விரும்பும் மக்கள், தங்களுடைய வாழ்வைத் தாண்டி கரைந்து போக விரும்புகிறார்கள். அவர்களுடைய வழிபாடுகளும், சாதனாக்களும் கரைந்து போவதை நோக்கமாகக் கொண்டிருந்ததால், நாம் தெய்வீகத்தை எப்போதும் இருளின் வடிவில்தான் குறிப்பிடுகிறோம். நமக்குத் தெரிந்த வரையில், இந்த பூமியின் மிகப்பெரிய ஒளிஆதாரம் சூரியன்தான். அந்த சூரியனின் ஒளியைக் கூட நீங்கள் கையால் தடுத்து நிறுத்தி, அதன் பின்னால் இருளின் நிழலைப் படரவிட முடியும். ஆனால் இருள் என்பது எங்கும், எதையும் சூழ்ந்திருக்கக் கூடியது.
உலகிலிருக்கும் முதிர்ச்சியடையாத மனங்கள், இருளை எப்போதும் சாத்தானின் வடிவமாகவே சித்தரிக்கின்றன. ஆனால் தெய்வீகம் என்பது எங்கும் நிறைந்திருக்கிறது என்று நீங்கள் சொன்னால், இயல்பாகவே நீங்கள் தெய்வீகத்தை இருளின் வடிவமாகத்தான் சொல்ல முடியும். ஏனென்றால் இருள்தான் எங்கும் பரவியிருக்கிறது. அது அனைத்து இடங்களிலும் இருக்கிறது. அதற்கு யாரிடமிருந்தும் எந்த உதவியும் தேவையில்லை. ஒளி என்பது தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் ஒரு எரிபொருளில் இருந்து வருகிறது. அதற்கென்று ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். அது வரையறைக்கு உட்பட்ட ஒரு மூலத்திலிருந்துதான் வருகிறது. ஆனால் இருளுக்கு எந்த மூலமும் கிடையாது; அதற்கு அதுதான் மூலம். அது எங்கும் பரவியிருக்கும், நிறைந்திருக்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே நாம் சிவன் என்று சொல்லும்போது, பிரபஞ்சத்தின் பரந்த வெறுமையைத்தான் சொல்கிறோம். இந்த பரந்த வெறுமையின் மடியில்தான் அனைத்து படைப்புகளும் பிறந்திருக்கின்றன. இந்த அருள் மடியைத்தான் நாம் சிவன் என்று சொல்கிறோம். இந்த கலாச்சாரத்தின் பழமையான அத்தனை பிரார்த்தனைகளும், உங்களைக் காப்பாற்றிக் கொள்வதைப் பற்றியோ, பாதுகாத்துக் கொள்வதைப் பற்றியோ, வளமான வாழ்க்கையைப் பற்றியோ இருக்காது.
‘அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்‘ என்றுதான் பிரார்த்தனைகள் இருந்தன. ஆகவே மாதத்தின் இருளான நாளாகிய சிவராத்திரி என்பது, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான எல்லையற்ற தன்மையை, உணர்வதற்கான ஒரு வாய்ப்பு. சிவராத்திரி அன்று, ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளும் இருக்கக் கூடிய அந்த பரந்த வெறுமையை, படைப்பின் மூலத்தை உணர்வதற்கான வாய்ப்பும், சாத்தியக்கூறும் பெற்றிருக்கிறான். மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி ‘மஹா சிவராத்திரி’ எனப்படுகிறது.
விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருக்கும்போது, அவருக்குள் இயற்கையாகவே ஆன்ம எழுச்சி நிகழ்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :