தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 7

- பட்டுக்கோட்டை பிரபாகர்

WD

தியானலிங்கத்தின் வாயிலில் முதலில் வரவேற்பது ஸர்வதர்ம ஸ்தம்பம். இது ஒரு கல்தூண். 17 அடி உயரமுள்ள இந்தத் தூணின் மூன்று பக்கங்களில் தியானலிங்கம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது என்பதைக் குறிக்கும்விதமாக பல சமயங்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. நான்காவது பக்கத்தில் மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

தியானலிங்கத்தை அடையும் முன்பாக நாம் முதலில் சந்திப்பது பதஞ்சலி முனிவரின் சிலையை. பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள யோகக் கலையின் தந்தையின் சிலை வடிவத்துக்கு ஒரு கதை உண்டு. சிவன் கழுத்தில் உள்ள பாம்பின் பெயர் கார்கோடகா. இந்தப் பாம்பு ஒரு சமயம் சிவன் என்றும் பாராமல் விஷம் கக்கிவிட, சிவனுக்கு வந்தது கோபம். கழுத்தில் சுதந்திரமாக இருந்த கார்கோடகனை எடுத்துத் தூக்கி எறிந்துவிட்டார். அந்தப் பாம்பு கார்கோடகனாக, கோனிகா என்கிற பெண்ணின் கைகளில் வந்து விழ, அவள் கார்கோடகனுக்கு பதஞ்சலி என்று பெயரிட்டு வளர்த்தாள். கார்கோடகனுக்கு சாப விமோசனமாக சிவனிட்ட உத்தரவானது... ‘நான் முழு மகிழ்ச்சியில் ஆடுகின்ற ஒரு நாளில் மீண்டும் என்னிடம் வா!’ என்பதே. பதஞ்சலி பல வருடங்கள் காத்திருந்தார். அப்படி ஓர் ஆனந்த நாளும் வந்தது. அன்று முழு மகிழ்ச்சியில் சிவன் ஆட, பதஞ்சலி மீண்டும் சிவனைச் சேர்ந்தார்.

சிவனைச் சேர்ந்த உச்சமான மகிழ்ச்சியில் அவர் அருளியவையே யோகத்தின் சூத்திரங்களாகும். ஆகவேதான் பதஞ்சலி முனிவருக்கு பாதி பாம்பும் பாதி மனிதனும் கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல... யோக நெறியில் நம்மிடம் பொதிந்துள்ள குண்டலினி சக்தியை பாம்பு வடிவத்தில் உருவகப்படுத்துகிறார்கள். பாம்பு ஓரிடத்தில் அசையாமல் படுத்திருக்கும் வரை அது இருப்பதே தெரியாது. குண்டலினி சக்தியும் அப்படித்தான். அந்த சக்தி உசுப்பப்படும் வரை, அப்படி ஒரு சக்தி
இருப்பதையே மனிதன் உணர்வதில்லை. அந்த குண்டலினி சக்தி மேல்முகமாக உயர்த்தப்படும் போதுதான் மனிதனுக்கு ஐம்புலன்களையும் கடக்கும் சக்தியும் உணர்வும் கிடைக்கிறது.

பதஞ்சலி முனிவரின் சிலைக்கு நேரெதிராக அமைந்துள்ள சிற்பம், ஒரு தங்க இலையுள்ள மரத்தின் வடிவம். வனஸ்ரீயின் திருஉருவம் அது. தியானலிங்கத்தின் அதிர்வுகளில் ஆண்தன்மை அதிகம் இருக்கக்கூடும் என்பதால் அதனைச் சமப்படுத்த பெண்தன்மை கொண்ட வனஸ்ரீயின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தியானலிங்கத்தின் நேரெதிரே தரையில் விழுந்து வணங்கும் ஒரு யோகியின் சிற்பம் உள்ளது.

அதைக் கடந்து நாம் நுழைவது தியானலிங்கத்தின் கருவறை. உலக உருண்டையை பாதியாக வெட்டிவைத்தது போல அரை வட்ட குவிந்த கூரையின் உயரம் 33 அடி. விட்டம் 76 அடி. இந்தக் கூரையில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதில் சிமென்ட், இரும்பு எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க செம்மண், செங்கல், சுண்ணாம்பு மற்றும் மூலிகைக் கலவைகளால் உருவாக்கப்பட்ட கூரை இது. கட்டிடக் கலையில் இதை ஒரு அதிசயம் என்றே சொல்லலாம். இதை ஆயிரக்கணக்கான தியான அன்பர்கள் எட்டே வாரங்களில் கட்டி முடித்திருக்கிறார்கள் என்பது மற்றொரு சிறப்புச் செய்தி.

இதன் நடுவில் கம்பீரமாக தியானலிங்கம். இதனைச் சுற்றி தியானலிங்கத்தின் ஆற்றல் வெம்மையைத் தணித்து குளுமை சேர்ப்பதற்காக ஜலசீமா என்கிற தண்ணீர் அகழி அமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தைச் சுற்றிலும் அமைதியாக அமர்ந்து தியானம் செய்வதற்காக இருபத்தெட்டு தவக்குகைகள். மேலும்...

Webdunia| Last Modified புதன், 10 அக்டோபர் 2012 (20:24 IST)
ஏழு!தியானலிங்கம் நிறுவப்பட்டதன் நோக்கம், ஆன்மீக மேம்பாட்டை அடைய ஆர்வமுள்ள அன்பர்களுக்கு உறுதுணையாக சக்தி வழங்குதலே என்றாலும்... மக்களின் ஏராளமான வாழ்க்கைததேவைகளுக்கும் தியானலிங்கத்தின் சக்தி அதிர்வுகள் உதவுகின்றன. இத்தனை சக்தி வாய்ந்த அம்சமாக தியானலிங்கத்தை சத்குரு எப்படி உருவாக்கினார் என்று ஆழமாகச் செல்வதற்கு முன்பாக, தியானலிங்கத்தின் அமைப்பையும் அதன் அதிர்வுகள் நல்கும் பலவிதமான பலன்களையும் பார்த்துவிடலாம்.
(அடுத்த புதனன்று வெளிச்சம் விரியும்...)


இதில் மேலும் படிக்கவும் :