தியானலிங்கம்: வெளிச்சம் வருகிறது - 4

- பட்டுக்கோட்டை பிரபாகர்

WD

சத்குரு அவர்கள் ஈஷா யோகா மையத்தின் வளாகத்தில், 1999-ம் வருடம் ஜூன் மாதம் 24-ம் தேதி ஆயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களின் முன்னிலையில் இந்தத் தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அன்றைய தினம் அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளை இப்போது பார்க்கலாம்.

‘‘தியானலிங்கம் என்பது ஒரு மகத்தான அற்புதம்! பொருள்களைத் தருவிப்பது, ஒன்றை வேறொன்றாய் மாற்றுவது, வாழ்க்கையின் இயல்பான போக்கில் குறுக்கிடுவது போன்ற அற்பமான விஷயங்களை நான் அற்புதம் என்று குறிப்பிடவில்லை.

பேராசை, பயம், வெறுப்பு, இவற்றிலிருந்து விடுபட்டு, வாழ்க்கை நம் மீது எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாதவாறு, வாழ்வின் எல்லா பரிமாணங்களையும் அறிந்து, உணர்ந்து ஒரு முழுமையான வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ முடிந்தால், அதுவே அற்புதமான விஷயம்!

தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் வருகிற அன்பர்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தால், அவர் திறந்த மனநிலையில் இருந்தால், வாழ்க்கையின் முழுமையையும் ஆழத்தையும் உணர்வதற்கான வாய்ப்பைத் தியானலிங்கம் ஏற்படுத்துகிறது.

காரண அறிவின் விளைவாக, நாம் வாழ்க்கையை அனுபவமாக உணரப் பயப்படுகிறோம். வாழ்க்கை பற்றி மிக அதிகமாகச் சிந்திக்கிறோம். ஆனால், வாழ்க்கையை உணர்தல் என்பது குறைவாகவே உள்ளது. ஒரு மனிதனின் காரண அறிவு, உள் உணர்வு என்கிற இரண்டு நிலைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். அது மட்டும் போதாது. இந்த இரண்டையும் தாண்டி வாழ்க்கை உள்ளது. அதை யோகத்தில் ‘பிரதிபா’ என்று அழைக்கிறோம். உள் உணர்வும் அன்றி, காரண அறிவும் அன்றி இந்த உலகம் எப்படி உள்ளதோ, அதை நேரடியாக அப்படியே உணர்வதே ‘பிரதிபா’.

ஒருமுறை நீங்கள் தியானலிங்கத்தின் சக்தி எல்லைக்குள் இருந்தால், ஆன்ம விடுதலைக்கான விதை உங்களுக்குள் விதைக்கப்படுகிறது. நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, நீங்கள் ஆராய வந்தீர்களோ, சரணடைய வந்தீர்களோ... ஆன்ம விடுதலைக்கான ஒரு விதை உங்களுக்குள் கண்டிப்பாக விதைக்கப்படுகிறது. இந்த விதையை நீங்கள் இன்றே துளிர்விட அனுமதிக்கலாம். அல்லது சில ஆண்டுகள் கழித்தும் அனுமதிக்கலாம். அல்லது சில ஜென்மங்கள் கழித்தும்கூட அனுமதிக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால் உங்களுக்குள் விதைக்கப்பட்ட விதையை உங்களால் அழிக்க முடியாது.

உண்மையில் தியானலிங்கத்தின் முக்கியத்துவம் இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னரே அறியப்படும். இப்போதைக்கு இது வாக்குவாதத்துக்கும் சர்ச்சைக்குரியதாகவுமே இருக்கும். இதன் உண்மையான தன்மையை உணர மக்களுக்குச் சிறிது காலம் ஆகும்.”

தியானலிங்கம் என்பது ஒரு கோயில் அல்ல. இதில் சைவக் கலாச்சாரமோ, இந்துப் பாரம்பரியமோ இல்லையென்றும், தியானலிங்கம் என்பது மதங்களைக் கடந்த சக்தி வடிவம் என்பதைக் குறிப்பிடத்தான் இதன் நுழைவாயிலில் பதினேழு அடி உயரத்தில் மூன்று பக்கங்களிலும் பல சமயங்களின் சின்னங்களும் இடம்பெற்றுள்ள ஸர்வ தர்ம ஸ்தம்பம் என்கிற தூண் நிறுவப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தாலும்... இன்னும் சிலருக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

சத்குரு நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு தியானத் தூண் அமைத்திருக்கலாமே அல்லது வேறு எத்தனையோ வடிவங்களில் தியானக் கட்டிடம் ஒன்றை அமைத்திருக்கலாமே... எதற்காக இந்த தியானலிங்கம்?

Webdunia|
நான்கு!தன்னை உணர்ந்த ஞானியின் சக்தி எப்படி தியானலிங்கத்துக்கு வந்தது, அல்லது யார், எப்படி அதைத் தந்தது என்றெல்லாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக, தியானலிங்கம் பற்றி சில அடிப்படையான தகவல்களைப் பார்த்துவிடலாம்.
லிங்கம் என்பது இந்து மதத்தினரின் வழிபாட்டு நம்பிக்கைகளில் வரும் கடவுளின் வடிவமாயிற்றே... அப்படியிருக்க, சத்குரு இந்த சக்திப் பெட்டகத்தை எதற்காக லிங்க வடிவத்தில் அமைக்க வேண்டும்?


இதில் மேலும் படிக்கவும் :