சுழற்சியிலிருந்து விடுதலை நோக்கி - ச‌த்குரு

FILE

மனிதர்களால் செய்ய முடிந்த அத்தனையும் அடிப்படையில், அவர்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். யாரோ ஒருவர் பாடுகிறார்கள், யாரோ ஆடுகிறார்கள், யாரோ புத்தகம் எழுதுகிறார்கள், யாரோ ஒரு ஓவியத்தை வரைகிறார்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான்.

நீங்கள் விழிப்புணர்வுள்ளவராக முடியும், இருந்தாலும், நீங்கள் சொல்லும் அனைத்தும், செய்யும் அனைத்தும், உங்களிடமிருந்து வெளி வரும் அனைத்தும் அடிப்படையில் நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அப்படிப் பார்க்கும்போது, யோகா இதற்கு முற்றிலும் மாறானது, ஏனென்றால் அது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல - அது நீங்கள் யார் என்பதை தீர்மானிப்பது. நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானித்து, ஒருவரது இருப்பின் அடிப்படையையே மாற்றிவிடுவது.

இன்று, யோகாவின் மூலம் உங்கள் மூளையின் செயல்பாடுகளை, உங்கள் இரசாயனத்தை, உங்கள் மரபணுக்களின் அடிப்படையைக் கூட மாற்றிவிட முடியும் என்று நிரூபிப்பதற்குப் போதுமான அளவு மருத்துவரீதியான, விஞ்ஞானரீதியான சான்றுகள் இருக்கின்றன. உண்மையில் இதற்கு எந்த நிரூபணங்களும் தேவையில்லை, ஏனென்றால், அதை நாம் எப்போதுமே அனுபவத்தில் பார்த்து வந்திருக்கிறோம், ஆனால் இன்று இதை நிரூபிக்க வேண்டுமானால் அதற்கும் விஞ்ஞானரீதியான சாட்சியங்கள் உள்ளன.

எனவே, யோகா என்பது நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடு அல்ல, அது நீங்கள் எந்த தன்மையிலஇருக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பது பற்றியது. தற்போது நீங்கள் யார் என்பதை உருவாக்கியிருக்கும் அடிப்படை மூலக்கூறுகளையே மாற்றுவது. யோகாவை ஒரு அமைப்பு ரீதியாகப் பார்த்தால், நாம் செய்யும் மற்ற எந்த செயலையும் விட, இதற்கு மிகுந்த ஈடுபாடு தேவைப்படுகிறது. மற்ற செயல்களெல்லாம் நாம் யார் என்பதன் வெளிப்பாடுகள் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட செயலிலேயே உங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினால், அதுவும் கூட ஓரளவு உங்களை நிலைமாற்றும்.

சமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டால், சில மாற்றங்கள் நிகழும். முழு மனதுடன் பாடினால், முழு மனதுடன் ஆடினால் சில மாற்றங்கள் நிகழும். ஆனால் அவற்றில் ஒரு குறிப்பிட்ட தாக்கம் மட்டுமே இருக்கும், ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட செயலில் மட்டுமே நீங்கள் முழுமையான ஈடுபாட்டைக் காட்டினீர்கள். ஆனால் அடிப்படையில் அந்த செயல், இயல்பிலேயே நீங்கள் யார் என்பதன் வெளிப்பாடுதான். அது உங்கள் தன்மை என்ன என்பதை தீர்மானிப்பதில்லை.

நாம் நம்முடைய செயலை நிலைமாற்றுவதற்காக ஆசனா செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் காலையில் யார் இது போல தங்களை வெளிப்படுத்திக் கொள்விரும்புவார்கள்? (முன்னால் குனிந்து ஒரு ஆசனா செய்வதைப் போல செய்து காட்டுகிறார்) கண்டிப்பாக யாரும் விரும்ப மாட்டார்கள், இல்லையா? எனவே ஆசனா ஒரு வெளிப்பாடு அல்ல. இது ஒரு முறை. இது ஒரு வழி. நீங்கள் யார் என்பதை மாற்றுவதற்கான ஒரு தொழில்நுட்பம். இதன் மூலம் உண்மையில் நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்களோ அந்த வடிவத்தை மாற்றலாம். அதை மாற்ற முடியும், ஏனென்றால் நீங்கள் என்பது உங்கள் மரபணு சார்ந்த விஷயங்கள், அதற்கு முன்னர் உங்களது கர்மவினைகள் என அனைத்தும் கலந்தே உள்ளது. அதனால்தான் நீங்கள் ஒரு குறிப்பிட்ட கருவறையைத் தேர்ந்தெடுத்து அதில் பிறந்தீர்கள். நீங்கள் பிறந்த அந்த கணத்திலிருந்து, பலவகையான அனுபவங்கள், சூழ்நிலைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உறவுகள், தொடர்புகள் என்று எவையெல்லாம் உங்களுக்குள் சென்றிருக்கின்றனவோ, நீங்கள் எதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டீர்களோ, அவையெல்லாம் சேர்ந்து உங்களை ஒரு குறிப்பிட்ட வகையான மனிதராக ஆக்கியிருக்கிறது.

"நான் ஒரு குறிப்பிட்ட வகையான மனிதன்" என்று நீங்கள் சொல்லும்போது, எனக்கு இந்த மாதிரியான கட்டாயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்கள். "நான் இப்படிப்பட்ட ஒரு மனிதன்" என்று நீங்கள் சொன்னால், இந்த வகையான கட்டாயங்களுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டேன், அதனால் நான் இப்படிப்பட்ட மனிதனாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். நான் காலை மனிதர் அல்லது மாலை மனிதர் அதாவது மாலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது அல்லது காலையில் என்னால் விழிப்புணர்வுடன் வேலை செய்ய முடியாது என்று சொல்கிறீர்கள். இப்படி உங்கள் வெளிப்பாடுகள் வளர்ந்து கொண்டே போகிறது. சிலர் ப்ளாக்பெரி அலைபேசி வைத்திருக்கிறார்கள், சிலர் ஆப்பிள் அலைபேசி வைத்திருக்கிறார்கள்; இப்படி இந்த உலகம் ஏகப்பட்ட வழிகளில் பகுக்கப்பட்டுள்ளது. அவை வெறும் அலைபேசிகள் அல்ல, அவற்றை நீங்கள் பயன்படுத்திவிட்டு கீழே வைப்பதுடன் முடிந்துவிடுவதில்லை, அவற்றுடன் நீங்கள் அடையாளப்பட்டு விடுகிறீர்கள். சிலர் சப்பாத்தி சாப்பிடுவார்கள், சிலர் அரிசி சாப்பிடுவார்கள், சிலர் தோசை சாப்பிடுவார்கள், சிலர் இட்லி சாப்பிடுவார்கள்... இப்படி எல்லா வகையான மனிதர்களும் இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த வகை என்பது ஒருவிதமான கட்டாயம்தான். இதுபோன்ற கட்டாயங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாததால் நீங்கள் உங்களை யோகாவின் செயல்முறைகளில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் கணத்துக்கு என்ன தேவையோ அப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள். அது காலையாக இருந்தால் ஒரு காலை மனிதராக இருக்கிறீர்கள், மாலையில் ஒரு மாலை மனிதராக இருக்கிறீர்கள். அதாவது நீங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறீர்கள். இந்த நெகிழ்வுத்தன்மையை முதலில் உங்கள் உடலிலிருந்து தொடங்குகிறீர்கள். பிறகு அது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் வந்துவிட வேண்டும் - உங்கள் உடல் அமைப்பு, உங்கள் மன அமைப்பு, உங்கள் உணர்ச்சிகளின் அமைப்பு, உங்கள் கர்ம அமைப்புகள் என்று அனைத்திலும் வந்துவிட வேண்டும். அனைத்தும் நெகிழ்வுத்தன்மையுடன் ஆகிவிட வேண்டும், எப்படித் தேவையோ அப்படி ஆக வேண்டும். இந்த வழி அல்லது அந்த வழியில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
Webdunia|
தனியொரு மனிதனை மாற்றியமைக்கும் யோகத்தின் திறன் பற்றி பேசுகிறார் சத்குரு...
உலகத்தில் இருக்கும் எல்லா விஷயங்களையும், ஒரு மனிதனால் செய்ய முடிகிறபோது, ஏன் யோகா செய்ய வேண்டும்?


இதில் மேலும் படிக்கவும் :