1. ஆன்மிகம்
  2. »
  3. ஆன்மிகம்
  4. »
  5. கட்டுரைகள்
Written By Webdunia

‌தியான‌லி‌ங்க‌ம்: வெ‌ளி‌ச்ச‌ம் வரு‌‌கிறது - 16

பதினாறு!

WD
மீண்டும் ஓட்டத்தை அதன் ஆரம்பக் கோட்டிலிருந்து துவங்க வேண்டிய சூழ்நிலை. மீண்டும் பிரதிஷ்டைக்குத் தயார் நிலைக்கு வர... அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆயிற்று. இப்போது முக்கோணச் சக்தி நிலையின் இரண்டு முனைகளுக்கும் சேர்த்து சத்குருவே செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்னொரு நபரை விஜி பங்கு வகித்த இடத்துக்குத் தயார் செய்வதற்குச் சிரமமாக இருந்ததால் அந்தப் பங்கையும் சத்குருவே ஏற்றுக்கொண்டு செயல்படத் தீர்மானித்தார். ஆனால் அப்படிச் செய்வது மிகப் பெரிய சவாலான காரியம் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

பிராணப் பிரதிஷ்டைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சத்குருவின் உடல் ஆரோக்கியம் என்பது ஒரு போராட்டமாகவே இருந்து வந்தது. ஒரு சமயம் பலத்தோடு இருப்பார். ஒரு சமயம் மிகவும் பலவீனமாக இருப்பார். அமெரிக்காவில் சத்குருவின் இரத்தம் சோதனை செய்யப்பட்டபோது
அங்கிருந்த மருத்துவருக்கு மருத்துவ ரீதியாகப் பல விஷயங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன. உடல் பரிசோதனை முடிவுகள், சத்குருவின் உடலில் பல விதமான கொடுமையான நோய்கள் இருப்பதாக அடையாளம் காட்டின. குடல் சிதைவுற்றிருந்தது. இதயம் சிக்கலில் இருந்தது. ரத்தம் மோசமாக இருந்தது. பலவிதமான புற்றுநோய்கள் இருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. திடீரென்று உடலில் கட்டிகள் ஏற்படுவதும், எந்தச் சிகிச்சையுமின்றி அவை தானாகக் காணாமல் போவதும் நடந்தது.

பிரதிஷ்டைக்குப் பிறகு சத்குருவுக்கு இனியும் தம் உடலைத் தேக்கி வைத்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. அதுவுமில்லாமல் மூவருக்குப் பதிலாக இருவராகச் செயல்படும்போது எந்த நேரமும் உடலைவிட்டு உயிர் விலக நேரிடும் சாத்தியம் இருப்பதாக சத்குரு உணர்ந்தார்.

ஆகவே முறையாக சத்குரு சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுதான் பிரதிஷ்டைப் பணிகளைத் துவங்கினார். தன் மகளை சட்டப்பூர்வமாக சுவீகாரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். ஈஷா யோகாமையத்தை எப்படி நடத்த வேண்டும், எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று எழுதிவைத்தார். அவரின் உடலுக்கென்று ஒரு சமாதியையும் தயார்படுத்தினார். பிரதிஷ்டைப் பணியில் இருக்கும்போது, உடலை மொத்தமாக விட்டுவிட்டால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவைத்தார். அப்படியில்லாமல், உடல் செயல் மட்டும் இழந்துபோனால் என்ன செய்ய வேண்டும் என்றும் தெளிவாகச் சொல்லிவைத்தார். அந்த சமயம் தியானலிங்கக் கோயிலுக்கு முன்பாக ஒரு கார் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த தியானலிங்கப் பிரதிஷ்டை பற்றி சத்குருவின் வார்த்தைகளிலேயே எளிமையாக விளக்குவதென்றால்...

‘இந்த பிரதிஷ்டையில் மந்திரங்களோ, சடங்குகளோ கிடையாது, மனிதர்களை உள்ளடக்கிச் செய்கிற சக்தி நிலையிலான பிரதிஷ்டை இது. சக்திநிலை சூட்சுமம் அடைந்து கொண்டே போனால், ஒரு எல்லைக்குப் பிறகு அதனால் ஒரு வடிவத்துக்குள் இருக்க முடியாது, எனவே சூட்சுமத்தின் உச்ச நிலையில் அந்த சக்திநிலையை அது எப்போதும் நிரந்தரமாக இருக்கும்படி நிலைநிறுத்த வேண்டும். ஒரு விதத்தில் அந்த உச்சமான சக்திநிலை லிங்கத்துக்குள் பூட்டி வைக்கப்படுகிறது.
WD

சுட்ட மண்ணால் ஆன பத்து பானைகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. அவற்றை உடைத்தால் வெறும் துகள்களாகப் போய்விடும். இப்போது இந்த சுட்ட மண் பானைகளை மீண்டும் களி மண்ணாக ஆக்கினால்.. அதாவது அப்படிச் செய்ய ஒருமுறை இருக்கிறதென்று வைத்துக்கொண்டால்.. அப்போது பத்து பானைகளும் மீண்டும் களி மண்ணாகின்றன. இந்த பத்து களி மண்ணின் மூலப் பொருள்களிலிருந்து சிறிது எடுத்து பதினொன்றாக ஒரு பானை உருவாக்க முடியுமல்லவா? அதைப்போல ஆத்ம சாதனைகள் வழங்கப்பட்ட, சக்தி நிலையில் தயார் செய்யப்பட்டவர்களின் உச்சமான சக்திநிலையை ஒருங்கிணைத்து ஒரு மேம்பட்ட சக்தி நிலையை உருவாக்குதலே பிரதிஷ்டை.’

இந்தப் பிரதிஷ்டைக்குத்தான் எழுபது பேருக்குப் பயிற்சியளிக்கப்பட்டு, அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டு.. பிறகு அவர்களையும் ஒரு நிலைக்குமேல் ஒருங்கிணைக்க இயலாமல் போய்... பிறகு சத்குரு, பாரதி, விஜி என்று மூன்றே பேர் போதும் என்று தீர்மானமாகி... அதிலும் விஜி திடீரென்று சமாதி அடைந்ததால், இருவர் மட்டும் பிரதிஷ்டையை மேற்கொள்ள வேண்டிவந்ததால்தான் நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன.

தியானலிங்கத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்வதென்பது, உச்சமான, மேம்பட்ட, சூட்சுமமான ஒரு சக்திநிலையை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த சக்திநிலையை நிலை நிறுத்திவைக்க அதன் சக்கரங்களைப் பூட்ட வேண்டும். அதே மூன்று வித பிராண சக்தியை ஒன்றாக இணைத்து ஒரு கயிறு போல, அதை வைத்து ஏழு சக்கரங்களும் பூட்டப்பட்டன. இவை எல்லாமே சூட்சும நிலையில் நிகழும் காரியங்கள். விஜி அவர்களின் இல்லாமையைச் சத்குருவே சமாளிக்க வேண்டியிருந்ததால், மிகவும் சிரமப்பட்டார். எந்த வினாடியும் உடலை சத்குரு துறந்துவிடும் வாய்ப்பு இருந்தது. அதை அவரும் எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே சக்திநிலையின் சுவாதிஷ்டான சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு கீழே விழுந்தார்!

(வெளிச்சம் விரியும்...)