வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (07:00 IST)

சேரி பிஹேவியர் குறித்து தலைவர்கள் கூறுவது என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் நாளில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் உச்சகட்டமாக தற்போது காயத்ரி ரகுமாம் 'சேரி' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட மோசமான வார்த்தைகளை நமது சமூகம் பேசுகிறது என்று கமல்ஹாசன் வக்காலத்து வாங்கினாலும் இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 



 
 
காயத்ரியின் பேச்சு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியபோது: சேரி பிஹேவியர்' என்று காயத்ரி பேசியது, அப்பட்டமான  சாதி ஆணவ, ஆதிக்கத் திமிர் ஆகும். அவரின் கீழ்த்தரமான சிந்தனையின் வெளிப்பாடு இது. 'மனிதர்களுள் உயர்வு தாழ்வு கிடையாது' என்ற, சமத்துவ சிந்தனை அவரிடமில்லை. அவருக்குள் ஊறிப்போயிருக்கும், ஆதிக்க சாதிய மனோபாவமே இவ்வகையான மோசமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளது .அதை,வேல்முருகன்  எந்தவிதத் தடையுமில்லாமல் எப்படி அந்தத் தொலைக்காட்சி  அனுமதித்தது...  என்று தெரியவில்லை குறிப்பாக கமல் இதை எப்படி அனுமதித்தார் என்பதுதான் என்னுடைய கேள்வி என்றார்
 
விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு இதுகுறித்து கூறியபோது, 'உண்மையில், சேரியில்தான் கூட்டுக்குடித்தனமும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுமான வாழ்க்கை முறை உள்ளது. வேகமான சுரண்டலை நிகழ்த்தி வரும் இந்த கார்ப்பரேட் உலகிலும், 'அன்பு செலுத்துதல்' என்ற தமது அழகியலில் இருந்து விலகாத பூமியாக இருப்பது சேரியே. இணைந்தும், பிறருக்காகத் தியாகம் செய்து வாழ்தலுமே சேரியின் அழகு. அதை அக்ரஹாரமோ, ஆதிக்க சமூக உளவியல் கொண்டவர்களிடமோ  எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் அது கிடையாது. எனவே சமகாலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களைக் கேவலமான வகையில் சுட்டிக்காட்டும் எதையும் நாம் ஏற்க முடியாது. அந்த நடிகையின் பேச்சு கண்டனத்துக்குரியது. அதைவிட, தன்னை பகுத்தறிவாளராக வெளிப்படுத்திக்கொள்ளும் கமல், இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது மோசடியானது.