ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (11:20 IST)

ஒரே நாளில் 2 ஆயிரம் பலி: இரண்டாவது இடத்தில் அமெரிக்கா!

கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா மற்ற நாடுகளை விட கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் முடங்கி கிடந்தாலும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் தீவிரமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்திருந்தாலும் பிறகு மெல்ல கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை மோசமாகியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் தொடக்கம் முதல் வேகமெடுத்த வைரஸ் பாதிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அமெரிக்கா சக ஐரோப்பிய நாடுகளை விட அதிகமான உயிர்பலியை சந்தித்து வருகிறது. உலக அளவில் அதிகம் மக்கள் கொரோனாவால் இறந்த நாடாக இத்தாலி உள்ளது. இங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,849 ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்க உள்ளது. அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 18,763 ஆக உள்ளது.

ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ள நிலையில் உலக அளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் நாளைக்கு இத்தாலியை அமெரிக்கா பின்னால் தள்ளிவிடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.