ஒசாமா பின்லேடன் உடல் கடலில் வீசப்படவில்லையாம்

osama binladen deadbody
Ilavarasan| Last Modified செவ்வாய், 12 மே 2015 (21:27 IST)
அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் உள்ள அமெரிக்க விமான தளத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கிருந்து வடக்கு அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ‘கர்ல் வின்சன்’ என்ற பிரமாண்ட அமெரிக்க கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அக்கப்பலில் இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, கடலில் உடல் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அரசு கூறியிருந்தது.
இந்நிலையில், அது பொய் என்று செய்மூர் ஹெர்ஷ் என்ற பழம்பெரும் அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அவர் பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையினருக்கு ஆலோசகர்களாக செயல்பட்ட 2 பேரும், ஓய்வுபெற்ற உளவு அதிகாரி ஒருவரும் கூறியதாக இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஆலோசகர்களின் கூற்றுப்படி, துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட எல்லா உடல்களும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு புகைப்படம் எடுக்கப்பட்டு, பின்லேடன் உடல் அடையாளம் காணப்பட்டது. அவரது உடலை சிஐஏ தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ‘கர்ல் வின்சன்’ கப்பலுக்கு உடல் கொண்டு செல்லப்படவும் இல்லை, இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, கடலில் அடக்கம் செய்யப்படவும் இல்லை என்று அந்த ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிரடிப்படையினர், துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு துண்டு துண்டாக சிதறிக்கிடந்த பின்லேடனின் உடல் பாகங்களை ஒரு பையில் போட்டு, ஜலாலாபாத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும்போது, இந்து குஷ் மலையில் அந்த உடல் பாகங்களை வீசி விட்டதாக ஓய்வுபெற்ற அமெரிக்க உளவு அதிகாரி கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த புதிய தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அமெரிக்கா நிராகரித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :