கல்லால் அடித்து கொல்லும் தண்டனை புரூனே நாட்டில் அமலுக்கு வருகிறது.

Suresh| Last Updated: புதன், 2 ஏப்ரல் 2014 (15:52 IST)
புரூனே நாட்டில் கல்லால் அடித்து கொல்லுதல், பிரம்பால் அடித்து கொல்லுதல், கை, கால்களை துண்டித்து கொல்லுதல் போன்ற மரண தண்டனை முறைகள் அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
சீனாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே, போர்னியோ தீவில் அமைந்துள்ளது புரூனே. இந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக உள்ளன. 1984 இல் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது. புருனேவில் 70 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு, படிப்படியாக, இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
எண்ணெய் வளம் மிக்க இந்நாட்டை சுல்தான் ஹசனல் போல்கியா ஆட்சி செய்கிறார்.
புரூனே நாட்டில், ஷரியத் சட்டத்தை அமல்படுத்த விரும்புவதாக புரூனே சுல்தான் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். அதை எதிர்த்து, சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுல்தான், அவர்கள் மீது ஷரியத் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.

இந்நிலையில், புரூனே நாட்டில், திட்டமிட்டபடி, ஷரியத் சட்டம் அமலுக்கு வருகிறது. இதன்படி, கல்லால் அடித்து கொல்லுதல், பிரம்பால் அடித்து கொல்லுதல், கை, கால்களை துண்டித்து கொல்லுதல் போன்ற மரண தண்டனை முறைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட அமலாக்கத்தை புரூனே சுல்தானே கண்காணித்து வருகிறார். இதற்கு மற்றொரு புறம் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இஸ்லாமிய சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படுவதாக, சுல்தான் ஹசனல் தெரிவித்துள்ளார். இதன் படி, கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு கல்லால் அடித்து கொல்லும் தண்டனை வழங்கப்படும்; திருட்டு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கைகள் துண்டிக்கப்படும், கருக்கலைப்பு மற்றும் மது அருந்துதல் போன்ற குற்றங்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்படவுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :