1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:07 IST)

செல்போனை தட்டி விட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

மதுரை பெரியார் நிலையத்தில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சிவகுமார் படியேறி ரிப்பன் வெட்ட வந்தார். அப்போது முன்னால் நின்றிருந்த இளைஞர் தனது செல்ஃபோனில் செல்ஃபி  எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிவகுமார் அந்த இளைஞரின் கையிலிருந்த செல்ஃபோனை வேகமாக  தட்டிவிட்டார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், சிவகுமாரை பலர் விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் சிவகுமார்  தெரிவித்ததாவது: செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் என்று கொடைக்கானல், ஊட்டி, தொட்டபெட்டா என்று போகும்போது  எடுக்கவேண்டிய விஷயம். அது அவரவரின் பர்சனல் விஷயம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
 
ஒரு பொதுஇடத்தில், 200, 300 பேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், காரில் இருந்து இறங்க ஆரம்பித்து மண்டபத்துக்குப் போவதற்கு முன்னாடியே, பாதுகாப்புக்கு வரக்கூடிய ஆட்களையெல்லாம் கூட ஓரங்கட்டிவிட்டு, இருபது முப்பது பேர், செல்போனை கையில்  வைத்துக்கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்று நடக்கவே விடாமல் பண்ணுவது, நியாயமா? யோசித்துப் பாருங்கள்.
 
'உங்களைப் படமெடுக்கறேன் சார்' என்று ஒருவார்த்தை கேட்கமாட்டீர்களா? விஐபி என்பவன், நாம் நில் என்றால் நிற்கவேண்டும் என்று  எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்?
 
எத்தனையோ முறை, விமானநிலையங்கள், திருமண விழாக்கள் முதலான இடங்களில், ஐபோனுக்கு போட்டோ எடுக்க நான் போஸ்  கொடுத்தேனா என்பது உங்களுக்கு தெரியுமா?
 
நான் புத்தன் என்று என்னைச் சொல்லிக்கொள்ளவில்லை. உங்களை மாதிரி நானும் மனுஷன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை  வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்பற்றுங்கள் என்று யாரிடமும் சொல்லவில்லை.  ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோதான்.
 
அதேசமயம் அடுத்தவர்களை நாம் எந்த அளவுக்குத் துன்புறுத்துகிறோம் என்பதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்வாறு நடிகர் சிவகுமார்  விளக்கம் அளித்துள்ளார்.