ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2024 (10:43 IST)

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமிக்கு தேசிய மாணவர் படையின் கௌரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது!

இந்தியாவிலேயே கவுரவ கர்னல் பதவியை பெற்றுள்ள   முதல் பெண்  தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழக  துணைவேந்தர் என்ற பெருமையை முனைவர் கீதாலட்சுமி பெற்றுள்ளார்.
 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படைக்கு துணைவேந்தர் ஆற்றிய தொண்டைப் போற்றும் விதமாக தேசிய மாணவர் படை  கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். வெ. கீதாலட்சுமிக்கு   கௌரவ கர்னல் பதவி வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை மையம் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் துணை இயக்குனர் ஜெனரல்,காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி,   கௌரவ கர்னல்  பதவியை துணைவேந்தர் கீதாலட்சுமிக்கு  வழங்கினார்.
 
நிகழ்ச்சியில் பேசிய அவர்....
 
தான் படிக்ககூடிய புத்தகங்களும், சந்திக்கக்கூடிய மனிதர்களும் தான் ஒருவருடைய வருங்காலத்தைத் தீர்மானிக்கிறது என்று கூறினார். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு விழிப்புணர்வு, சமநிலை மனப்பான்மை, துணிவு மற்றும் ஒழுக்கம் ஆகிய நான்கு விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
 
தொடர்ந்து,ஏற்புரை வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். வெ. கீதாலட்சுமி,  இந்தக் கர்னல் பதவி தன்னைப் பெருமைப்படுத்துவதாகவும், சீர்மிகு சமுதாயத்தை உருவாக்க தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பதாகவும் உறுதி கூறினார்.இந்நிகழ்ச்சியில்,
 
கோவை மண்டல என். சி. சி குரூப் காமாண்டர் கர்னல் பி. வி. எஸ். ராவ் மற்றும் காமண்டிங் ஆபீசர் ஜே. எம். ஜோசி, வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் , முதன்மையர், மாணவர் நல மையம் முதன்மையர் முனைவர். மரகதம்,மற்றும்  வேளாண்மைப் பல்கலைக்கழகத் தேசிய மாணவர் படை அதிகாரிகள் முனைவர். சு.மனோன்மணி மற்றும் முனைவர். சந்தோஷ் பட்டேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்தியாவிலேயே இந்த கௌரவ பதவிச்சின்னத்தைப் பெறும் முதல் பெண் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி  என்பது குறிப்பிடத்தக்கது.