வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2015 (18:12 IST)

சிகிரியா குன்றோவியச் சுவரில் கிறுக்கிய பெண் விடுதலை

இலங்கையில் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் பெண் இன்று வியாழக்கிழமை சிறைச்சாலையிலிருந்து விடுதலையானார்.
 


அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி முதல் கைதியாக இருந்த 28 வயதான சின்னத்தம்பி உதயஶ்ரீ சிறையிலிருந்து விடுதலையாகி தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்
 
மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியை சேர்ந்த இவர் பழமையும் பாரம்பரியமும் மிக்க சிகிரியாவிற்கு பெப்ரவரி மாதம் 14ம் திகதி சுற்றுலா சென்றிருந்த வேளை மலைக்குன்றிலுள்ள புராதன ஓவியங்கள் கொண்ட சுவரின் மீது பதிக்கப்பட்ட கண்ணாடியில் தனது பெயரை எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தம்புள்ள பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததார்.
 
தம்புள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் இவரை குற்றவாளியாக தீர்மானித்து இரண்டு வருட சிறைத்தண்டணை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை கைதியாகவிருந்த சின்னத்தம்பி உதயஸ்ரீயின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என நாட்டின் பல்வேறு தரப்பினராலும் ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இம்மாதம் முதலாம் திகதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அந்நாளிலிருந்து ஒரு மாதத்தின் பின்னரே அவர் விடுதலையாகியுள்ளார்.
 
இவருக்கு தம்புள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இரு மேன் முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே கண்டி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனுக்கள் நீதிமன்ற விசாரனையில் இருந்ததன் காரணமாகவே இவரது விடுதலையில் இந்த தாமதம் ஏற்பட்டது.
 
நேற்று புதன்கிழமை இரு மனுக்களும் வாபாஸ் பெறப்பட்டதையடுத்தே இன்று அவர் விடுதலையாகியுள்ளார்.