அமெரிக்க முன்னாள் டென்னிஸ் நட்சத்திரம் ஆந்த்ரே அகாஸி ஊக்க மருந்து எடுத்து கொண்டதாக தனது சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளதையடுத்து உலகின் முன்னணி நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ரோஜர் ஃபெடரரும், ரஃபேல் நடாலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்ரிடில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ரஃபேல் நடால், "எனக்கு இது பயங்கரமானதாக தோன்றுகிறது. ஓய்வு பெற்ற பிறகு இப்போது ஏன் இதனை தெரிவிக்கவேண்டும்?" என்று நடால் கேள்வி எழுப்பினார்.
"இது டென்னிஸ் ஆட்டத்திற்கு கேடு விளைவிப்பது, மேலும் இப்போது வந்து கூறுவது அர்த்தமற்றதாக உள்ளது".
"எங்கள் விளையாட்டு சுத்தமாக இருக்கவேண்டும் என்பதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். ஏமாற்றுக்காரர்கள் தண்டிக்கப்படவேண்டும், அகாஸி ஏமாற்றினார் என்றால் அவரும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்". என்று நடால் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் அகாஸியை வென்ற ரோஜர் ஃபெடரர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் "இது பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன், எனக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது, எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது பார்த்துக் கொள்வது நலம்" என்று கூறினார்.
ஆனால் பொதுவாக விளையாட்டு வீரர்களின் "நேர்மையான வாக்குமூலம்" அவர்கள் புத்தகம் எழுதும்போது ஏன் வெளிப்படவேண்டும்?, ஏன் முன்னதாகவே அது வெளிப்படுவதில்லை? என்ற கேள்வியை நாம் கேட்பது முக்கியமானது.
இம்ரான் கான் தான் கிரிக்கெட் பந்தை முறைகேடாக சேதபடுத்தியதை 'தன் மன சாட்சி உறுத்தியதால்' வெளியிட்டேன் என்று கூறும்போதும் கிரிக்கெட் புத்தகம் ஒன்றை விற்கும் நோக்கம்தான் வெளிப்படையாக தெரிந்தது.
அகாஸியின் சுய சரிதை நூலின் விலை சுமார் 32 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.