புதுடெல்லியில் அடுத்தாண்டு அக்டோபரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளுக்கான சுடர் ஓட்டம் மற்றும் போட்டிக்கான கவுண்ட்-டவுன் லண்டனில் இன்று துவங்குகிறது.
இன்று துவங்கி உலக முழுவதும் 1.90 லட்சம் கி.மீ தூரத்தை கடக்கும் காமன்வெல்த் சுடர் 340 நாட்களுக்குப் பின்னர் புதுடெல்லி வந்தடையும். காமன்வெல்த் சுடர் ஓட்ட சரித்திரத்தில் புதுடெல்லி போட்டிக்கான சுடர் கடக்கப் போகும் தூரமே மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற உள்ள சுடர் ஓட்ட துவக்க விழாவில் இங்கிலாந்து ராணி எலிசபெத், இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா சுடர் ஓட்டத்தை துவக்கி வைக்கிறார். இதேபோல் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மல்யுத்த வீரர் சுஷில் குமார், 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்படும் மில்கா சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி, முன்னாள் ஹாக்கி வீரர் திலிப் திர்கே ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கபில்தேவ், “காமன்வெல்த் சுடர் ஓட்டத்தில் பங்கேற்க கிடைத்துள்ள வாய்ப்பு உண்மையிலேயே பெருமையளிக்கிறது” எனக் கூறினார்.