இஷாந்த் ஷர்மா சமீபகாலமாக வேகமாக வீசுவதில்லை, என்ற விமர்சனத்தை எதிர் கொண்டு வருகிறார். ஆனால் அவர் வதோதராவில் வலைப்பயிற்சியின் போது முழு வேகத்துடனும், வெறியுடனும் வீசி இந்திய அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் நெஞ்சில் அடிபடுமாறு ஒரு பயங்கர பந்தை வீசினார்.
நல்ல அளவில் விழுந்து எழும்பிய அந்த பந்தை கண்டு சேவாக் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தார். அப்போது பந்து அவரது உயர்த்திய மட்டையையும் தாண்டி அவரது நெஞ்சை தாக்கியது. ஆனால் அதன் பிறகு சேவாக் சுதாரித்து விட்டார்.
இஷாந்த் ஷர்மா அரை மணி நேரம் தொடர்ச்சியாக நல்ல வேகத்தில் பந்து வீசியதாக வதோதராவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனுடன் சில பேட்டிங் உத்திகளை விவாதித்தார். யுவ்ராஜ் சிங் நல்ல நிலையில் பேட் செய்தார். ரெய்னா, ரவிந்தர் ஜடேஜா, விரத் கோலி ஆகியோரும் நல்ல பேட்டிங் நிலையில் உள்ளதாக தெரிகிறது.
முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.